நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகரம் உருவாகி 200 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மாநில பட்ஜெட்டில் 10 கோடி ரூபாயை சிறப்பு நிதியாக தமிழக அரசு ஒதுக்கி இருந்தது இந்த நிலையில் உதகை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாவரவியல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டி நகரத்தை உருவாக்கிய ஆங்கிலேயர் ஜான் சல்லிவனின் மார்பளவு சிலையை திறந்து வைத்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலின் சூடு தாங்கமல் எப்படியாவது ஒரு முறையாவது ஊட்டிக்கு சென்று என்ஜாய் செய்ய எல்லோரும் நினைப்போம். அந்த அளவுக்கு குளுமையின் குடோனாக விளங்கும் நீலகிரியை மலைவாழிடத்தளமாக உருவாக்க ஒரே ஒருவர்தான் காரணம் அவர்தான் ஜான் சல்லிவன். ஊட்டியை ஜான் சல்லிவன் கண்டுபிடித்தார் என்பதை விட ஊட்டியை உருவாக்கியவர் என்று சொல்வதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். ஏனென்றால் யாருமே புழங்காத இடத்தை அவர் தேடி கண்டுபிடித்து ஊரை உருவாக்கவில்லை, இங்கு பலநூறு ஆண்டுகளாக பழங்குடிகள் வாழ்ந்த இடம். ஆதிகாலத்தில் இருந்தே மண்ணின் மைந்தர்களான தோடர்கள், கோத்தர்கள், குரும்பர்களின் பூர்வநிலமான நீலகிரி மலைப்பகுதி. நீலநிறத்தில் பூக்கும் குறிஞ்சி மலர்கள் அதிகமாக பூக்கும் பூமி என்பதால் இதற்கு நீலகிரி என்று பெயர் வந்தது.
குளுகுளு பகுதியை தேடிய ஆங்கிலேயர்கள்
ஆதிகாலத்தில் இருந்தே பழங்குடி மக்கள் இங்கு இருந்தாலும் மலை பிரதேசத்திற்கும் மலை அடிவாரத்தில் வாழ்ந்த மக்களுக்கும் தொடர்பு என்பதே இல்லாமல்தான் இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் பிரிட்டிஷின் ஆளுகைக்கு கீழ் வந்தபோது இம்மலை குறித்த பல்வேறு தகவல்கள் ஆங்கிலேயர்களின் காதுகளை எட்டத் தொடங்கிவிட்டது. குளிர்ந்த பிரதேசத்தில் வாழ்ந்து பழங்கிய ஆங்கிலேயர்கள், மெட்ராஸ் பிரசிடென்ஸிக்குள்ளேயே பனி படர்ந்த மலைப்பகுதி ஏதேனும் உள்ளதா என்பதை தேடத் தொடங்கிவிட்டனர்.
அப்போது ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்றோ, தனக்கு வந்த தகவல்கள் எல்லாம் உண்மையா என கண்டறிந்து சொல்லுமாறு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தவருக்கு கடிதம் அனுப்பி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை செயல்படுத்தும் வேலையில் இறங்கியவர் நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் ஜான் சல்லிவன்.
படையுடன் மலையேறிய ஜான் சல்லிவன்
15 வயதில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராக தனது பணி வாழ்க்கையை தொடங்கிய ஜான் சல்லிவன், தனது 26ஆவது வயதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரானர். பின்னர் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். 1818ஆம் ஆண்டு தனது உதவியாளர்களான விஷ் மற்றும் கின்னஸ்லி என்ற இருவரை அனுப்பி இம்மலை குறித்த தகவலை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இரண்டு உதவியாளர்களும் திரும்ப வந்து சொன்ன விஷயங்கள் ஜான் சல்லிவனின் ஆர்வத்தை தூண்டியது. மலை மேல் என்ன இருக்கிறது என்பதை நேரில் சென்று அறிய முடிவெடுத்த ஜான் சல்லிவன், படையை அனுப்ப கோரி மெட்ராஸுக்கு கடிதம் எழுதினார். 15 யானைகள், ஏராளமான வேட்டைநாய்கள், 50க்கும் மேற்பட்ட வீரர்களுடன் 1819ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி மலைத்தொடரின் மேல் என்ன இருக்கிறது என்பதை அறிய சிறுமுகையில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். ஜான் சலிவன். சாலையே இல்லாத மலையில் காட்டு செடிகளை ஒதுக்கி, பாறைகளை செதுக்கி பாதையை உருவாக்கி ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கும் மேல் பயணம் செய்தனர்.
ஜான் சல்லிவனை வரவேற்ற தோடர்கள்
இந்த பயணத்தின் போது சிலர் நோய்வாய்ப்பட்டும், பாறைகளில் வழுக்கி விழுந்தும் உயிரை இழந்துள்ளனர். ஒரு நிலைக்கு மேல் யானைகளால் மலைகளில் ஏற முடியவில்லை, கயிரை கொண்டு மலைகளில் ஏறி ஜான் சல்லிவன் குழுவினர் தனது பயணத்தை தொடந்தனர். சிறுமுகையில் தொடங்கிய இந்த பயணம், தெங்குமரக்கடா, கப்பட்டி என தொடந்து கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரிமூக்கு பகுதியில் நிறைவடைந்தது. அந்த உச்சிக்கு வந்ததுமே பெருமூச்சு விட்டு பிரிட்ஷின் கொடியை நிலைநாட்டினார் ஜான் சல்லிவன். இவ்வாறு மலையேறியவர்களை இன்முகத்துடன் வரவேற்றவர்கள் தோடர்கள். இவ்வுளவு கடினப்பட்டு மலைமேல் ஏறி வந்தும் இங்கு மனிதர்கள் வாழ்வதை கண்டு ஆச்சர்யப்பட்டனர் ஜான் சல்லிவன் குழுவினர். இந்த இடத்திற்கு என்ன பெயர் என்று ஜான் சல்லிவன் கேட்டதற்கு ஒத்தைகல் மந்து (மந்து என்பதற்கு தோடர்களின் வாழ்விடம் என்று பொருள்) என தோடர்கள் பதிலளித்துள்ளனர். இதை உள் வாங்கிய ஜான் சல்லிவன், தனது ஆங்கில நாக்கில் சரியாக உச்சரிக்க முடியாமல் ஒட்டகமந்த் என சொல்லியுள்ளார். இதுதான் காலப்போக்கில் உதக மண்டலமாக மாறி இன்று ஊட்டியாக உள்ளது.
இது ஒரு குட்டி சுவிட்சர்லாந்து
அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் எழுந்துபார்த்தபோது மண் குடுவையில் வைக்கப்பட்ட தண்ணீர் உறைந்துபோனதை கண்டு மிரண்டு போன ஜான் சல்லிவன், மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆளுநர் சர் தாமஸ் மன்றோவுக்கு, எனதருமை கவர்னருக்கு, நான் இங்கு மலை உச்சியில் மேகத்தை முத்தமிட்டபடியே கடிதம் எழுதுகிறேன் என்று கடித்தை எழுத தொடங்கினார். இந்த இடம் மிகவும் குளிராக உள்ளது. இதை ஒரு குட்டி சுவிட்சர்லாந்து என்றே சொல்லலாம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடிகளின் நண்பன்
மலைகளில் இருந்து கீழிறங்கி கோவைக்கு சென்ற ஜான்சல்லிவன், உடனடியாக மெட்ராஸுக்கு சென்றார். மெட்ராஸ் மெடிக்கல் சொசைட்டி மூலம் இந்த இடம் வாழத்தகுதியானதா என ஆராய்ந்த பின்னர் மலைவாழிடத்தளத்தை உருவாக்க முடிவெடுத்தது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அரசு. அதற்கான அரசின் முடிவை தனது பொறுப்பாக எடுத்து கொண்ட ஜான் சல்லிவன், இந்த இடமும் இந்த மண்ணும் பழங்குடிகளுக்கு மட்டும்தான் சொந்தம், அவர்களிடம் இதை விலைகொடுத்துதான் வாங்க வேண்டுமே தவிர, அடித்து பிடுங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
கோடைகாலத்தில் கோவையில் இருந்து வேலை செய்வதற்கான ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை ஊட்டியில் கட்டியதுடன், தோடர்களிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு வாங்கி கல்லால் ஆன தனிமாளிகையை கட்டினார் ஜான் சல்லிவன். தற்போது இது ஊட்டி அரசுக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. ஜான் சல்லிவனுக்கு பிறகு மெட்ராஸ் ஆளுநர் சர்தாமஸ் மன்றோ உட்பட பல்வேறு ஆங்கிலேயர்கள் தங்கள் மாளிகைகளை கட்டத் தொடங்கியதால், தனி நகரமாக உருவெடுத்தது ஊட்டி.
தோட்டப்பயிர்களுக்காக வெட்டப்பட்ட ஏரி
ஊட்டியை ஓய்வெடுக்கும் மலைவாழிடத்தளமாக மட்டும் உருவாக்காமல், உருளைக்கிழங்கை அறிமுகப்படுத்தி தோட்டப்பயிர்களின் வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்டார் ஜான் சல்லிவன், ஊட்டி ஆப்பிள் எனப்படும் ப்ளம்ஸ், காரட் உள்ளிட்ட ஐரோப்பிய காய்கறிகளை பயிரிட ஊக்குவித்துடன், ஊட்டியில் செயற்கை ஏரியை வெட்டினார்.
பழங்குடிகளுக்காக ஆங்கிலேயர்களுடன் முரண்பட்ட ஜான்சல்லிவன்
நீலகிரியின் பூர்வக்குடிகள் மீதான ஜான்சல்லிவனின் அணுகுமுறை முற்போக்கானது, பூர்வீக மக்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகளிடம் வாதிட்டார். நீலகிரியில் தோடர் பழங்குடியினருக்குதான் மொத்த உரிமைகள் இருப்பதாக கூறிய ஜான் சல்லிவனின் கருத்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுடன் முரண்பட வைத்தது. இதனால் ஊட்டியை நிர்வகிக்கும் அதிகாரம் மேஜர் வில்லியம் கெல்சோ என்பவரின் கட்டுப்பாட்டிற்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஊட்டியை விட்டு வெளியேற காரணமான மனைவி மகளின் மரணம்
கோயம்புத்தூர் கலெக்டராக தனது பதவிக்காலத்தை முடித்த ஜான் சல்லிவன், 1838 ஆம் ஆண்டில் அவரின் மனைவியும் மகளும் இறந்தனர். ஊட்டியில் உள்ள புனித ஸ்டீபன் தேவாலயத்தில் நடைபெற்றது மற்றும் கல்லறைகளை இன்றும் காணலாம். துக்கமடைந்த சல்லிவன், தான் மிகவும் விரும்பி வளர்த்த மலைப்பகுதியை விட்டு வெளியேறி தனது எட்டு குழந்தைகளுடன் இங்கிலாந்து திரும்பினார். அங்கு 1855 ஆம் ஆண்டு உயிரிழந்தார். விடுதலை பெற்ற இந்தியாவில், ஜான் சல்லிவனைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரின் கல்லறையை கண்டுபிடிக்கும் பணி 1999 ஆம் தொடங்கி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் 2009ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று, இங்கிலாந்தின் ஈத்ரு விமான நிலையம் அருகில் உள்ள புனித லாரன்சு பேராலயத்தில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.