ஜூன் மாதமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.


இதுகுறித்துத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தமிழக முதல்வருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


''தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு முடிந்து மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல உள்ளனர். மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில்தான் இருப்பார்கள்.


இதனால், அரசு அறிவித்தபடி ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களும், பள்ளிக்கு வந்து படிப்பை உறுதி செய்திட வேண்டும்.


ஏற்கனவே 800  நாட்கள் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்துவிட்டு, கற்றல் இழப்பை மாணவர்கள் சந்தித்தனர் மீண்டும் அந்தத் தவறை நாம் செய்யக்கூடாது. காலதாமதமின்றி அரசு அறிவித்த தேதியில் உடனடியாக அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட வேண்டும்.




சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று கேட்பது வேதனையாக இருக்கிறது. ’ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி’ என்பதை மறந்து விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே மாணவர்கள் அடிப்படைக் கல்வியை மறந்துவிட்டார்கள். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் இந்தக் கல்வியாண்டில் மகிழ்ச்சிகரமாக இந்த ஆண்டே, இந்த மாதமே தொடங்க வேண்டும்.


அதில் ஆசிரியர்களும் மாணவர்களும் சுணக்கம் காட்ட கூடாது. கல்விப் பணியில் செய்வதற்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கின்றன. பள்ளிகள் திறப்பைக் காலதாமதம் செய்யச் செய்ய, மாணவர்களை வீட்டில் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. அவர்கள் வேறு வழியில் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். படிக்கிற சூழல் இல்லாமல் போகும். மாணவர்கள் படிப்பதை மறப்பார்கள். 


ஏழ்மையான பெற்றோர்கள் கூலி வேலைக்குப் பிள்ளைகள் அனுப்புவார்கள். விடுமுறை தொடரும் சூழலில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சமுதாய சீர்கேடுகள் அதிகரிக்க நேரிடலாம். இதனால் பெற்றோர்களின் மன உளைச்சலைக் குறைக்கவும் கற்றம் இழப்பைத் தவிர்க்கவும், உடனடியாகப் பள்ளிகளைத் திறந்து பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். 


இதனால் ஜூன் மாதம் முதல் வாரமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும்ம் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், இன்ன பிறவற்றை வழங்க வேண்டும். அடிப்படை கல்வியை உறுதி செய்ய வேண்டும். 


விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, கற்றல் ஆர்வத்தைத் தூண்ட குறிப்பிட்ட கால அவகாசமும் அவசியம். இதனால் ஜூன் மாதமே உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும்''.


இவ்வாறு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.