நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை பங்கமாக கலாய்த்து காட்சி ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


ஜெயிலர்:


சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர் ரஜினிகாந்த்  4வது முறையாக இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 


Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!


சிறப்பான வரவேற்பு:


நேற்று முதலே தியேட்டர்கள் களைக்கட்ட தொடங்கியது. தோரணங்கள், பேனர்கள், போஸ்டர், கட் அவுட்டுகள் என திருவிழா கோலம் பூண்ட தியேட்டர்களில் விடிய விடிய ரசிகர்கள் ஜெயிலர் படத்தை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாடல்கள், ட்ரெய்லர் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்னும் ஒருபடி மேலே போய் ஆடியோ வெளியீட்டு விழா உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 


ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் மட்டும் 900 ஸ்கிரீனில் வெளியாகியுள்ளது. இதுவே அதிகபட்ச சாதனையாக பதிவாகியுள்ளது. மேலும் கிட்டதட்ட முன்பதிவில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் காலை 9 மணிக்கே முதல் காட்சி  தொடங்கியது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த படங்கள் தோல்வியால் துவண்டு கிடந்த ரசிகர்களுக்கு, ரஜினி மற்றும் நெல்சன் இருவரும் கம்பேக் கொடுத்து உள்ளனர். 






ப்ளூசட்டை மாறன்:


இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து காட்சி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தில்  நடிகர் சுனில், நடிகராகவே வருகிறார். அவரின் படம் பற்றி தவறாக விமர்சனம் சொன்னதாக ஒருவரை மரத்தில் கட்டி வைத்துள்ளார்கள்.


அப்போது அங்கு வரும் சுனில், “ஒரு கோடி ரூபாய் செக்கை கையில் கொடுத்து என்னோட அடுத்தப் படத்தை நீதான் எடுத்து ஹிட் கொடுக்க வேண்டும். நீ எடுக்குற படத்தை இன்னொருத்தன் விமர்சனம் பண்ணும்போது தான் புரியும்” என்கிற ரீதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள நபர் நீல கலர் கலந்த சட்டையை அணிந்திருப்பார். இது கண்டிப்பாக ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து தான் நெல்சன் இந்த காட்சியை வைத்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.