நீயா? நானா?
பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், 'அடிக்கடி நகை வாங்கும் குடும்பத் தலைவிகள்' மற்றும் 'நகை வாங்குவதை கேள்வி கேட்கும் குடும்பத் தலைவர்கள்' என்ற தலைப்பின் கீழ் இந்த வாரம் விவாதிக்கப்பட்டது.
குமுறிய கணவன்மார்கள்:
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல சுவாரஸ்ய விஷயங்கள் நடந்தது. சிலர் தங்களது உழைப்பில் நகைக்சீட்டு போட்டு வாங்கியது. மாமியார், கணவர் திருமண பரிசாக அளித்ததது, காதலித்தபோது கொடுத்தது என பல சுவாரஸ்ய சம்பவங்களை பெண்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதனை அடுத்து, எதிர்தரப்பில் இருந்த ஆண்கள் தங்களது பிரச்னைகளை முன்வைத்தனர். எந்த நகை வாங்கும்போது தாங்கிக் கொள்ள முடியவில்லை? என்று கோபிநாத் கேள்வியை முன்வைத்தார். இதற்கு ஆண்கள் தரப்பில் இருந்து ஒருவர் கூறியதாவது, ”என் மனைவிக்கு நகை வாங்க 25 சவரனுக்கு பணம் கட்டினேன். ஆனா வேஸ்டேஜ் போக எங்களுக்கு 20 சவரன் நகை தான் வந்துச்சு. வேஸ்டேஜ் 25 சதவீதம் போனது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. புது மாடல் என்று வாங்கி இதுபோன்று நட்டத்தை கொண்டு வருகின்றனர். இப்படி இந்த மாடல் நகை இல்லை என்று போனா வாழ்க்கையில் முன்னேற்றத்தை பார்க்க முடியாது” என்று மனவருத்தத்துடன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு நபர் பேசியதாவது, "ஒட்டியாணம் வேண்டும் என்று எனது மனைவி கேட்டார். நானும் சமாதானப்படுத்தி பார்த்தேன். அதற்கான வயதும் இல்லை, உடல் எடை பற்றியும் அறிவுறுத்தினேன். இதனால், ஒட்டியாணம் வாங்குவதற்காக 82 கிலோ இருந்தவங்க 68 கிலோ உடல் எடையை குறைத்தாங்க. அதன்பின், 15 சவரனுக்கு ஒட்டியாணத்தை எடுத்துள்ளார்: என்றார். தொடர்ந்து “ஒட்டியாணம் வாங்கிய பூரிப்பில் உடல் மீண்டும் ஏறிவிட்டால் என்ன செய்வீர்கள்” என கோபிநாத் அவரை கலாய்த்தார்.
கலங்கிய கணவர்:
இதனை அடுத்து, ஆண்கள் தரப்பில் இருந்து ஒருவர் பேசியதாவது, "என்னுடைய மனைவி போட்டிருக்கிற ஆரம் 5 பவுன். ஆனா அது வாங்குறதுக்கான நான் வெளிநாட்டில் இருந்து வாங்கிட்டு வந்த பழைய நகை எல்லாம் சேர்த்து ஏழரை பவுன் கொடுத்துட்டு, இந்த ஐந்து பவுன் வாங்கிட்டு வந்து இருக்காங்க. இப்போ உள்ள லேட்டஸ்ட் மாடல் வேண்டும் என்பதற்காக ஏழு அரை பவுன் நகையை கொடுத்துட்டு ஐந்து பவுன் வாங்கியிருக்காங்க.
இது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இரண்டு அரை பவுன் நட்டமா போயிருச்சுனு. நான் வெளிநாட்டில் வெயில கஷ்டப்பட்டு கார்பெண்டர் வேலை பார்த்து கொஞ்ச கொஞ்சமா பார்த்து பார்த்து வாங்கன நகை. இதை இப்படி ஈஸியா இவங்க மாத்துறாங்க” என மனவருத்தத்துடன் கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியான கோபிநாத், "என்னது ஏழு அரை பவுனுக்கு ஐந்து பவுன் தானா?” என்றார் அதற்கு, அந்நபரின் மனைவி, “இது புது மாடல் தங்கம். அதனால் அந்த விலைக்கு தான் எடுப்பாங்க. அந்த பழயை நகையை போட முடியாமல் இருந்ததது. இப்போ ஐந்து பவுன் எடுத்து பார்வையா போட்டிருக்கிறேன். இப்படி நான் புது நகை போட்டிருப்பது என்னுடைய கணவருக்கு தான் பெருமை. எனக்கு இரண்டு லட்ச ரூபாய் நட்டமானது ஓகே தான். பெரியதாக தெரியல” என்று கூலாக பதில் அளித்தார்.