நடிகர்களை கடவுளாக வழிபடும் வழக்கம் இந்திய சினிமா ரசிகர்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது. அண்மையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைத்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. தங்களது ஆதர்சமான நடிகர்களின் படம் வெளியாகும் போதும் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாணின் ரசிகர்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளனர்.


ப்ரோ


பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியிருக்கும் ப்ரோ படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நீண்ட நாள் கழித்து பவன் கல்யாணை திரையில் பார்க்கும் ரசிகர்கள் திரையரங்களில் குவிந்து வருகிறார்கள். கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லையென்றாலும் திரையரங்க உரிமையாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு ஒரு செயலை செய்திருக்கிறார்கள்.


 திரைக்கு பால் அபிஷேகம்


ஆந்திர மாநிலம் பார்வதிபுரத்தில் அமைந்திருக்கும் செளந்தர்யா திரையரங்கத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி  ப்ரோ படம் வெளியானதை முன்னிட்டு திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின. அப்போது படத்தில் பவன் கல்யாண் தோன்றியபோது உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் திரைக்கு பால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.  இதனைத் தொடர்ந்து திரையைக் கிழித்து விட்டிருக்கிறார்கள். இதனால் திரையிடல் தடைபட்டது. இதனால் அங்கு விரைந்த போலீஸ் அவர்களைக் கைது செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


தீ வைத்த ரசிகர்கள்






முன்னதாக பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த குஷி படம் ரீரிலிஸ் செய்யப்பட்டபோது திரையரங்கத்திற்குள் தீ வைத்து நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  சில நடிகர்கள் ரசிகர்களின் இத்தகைய செயலை கண்டிக்கும் நிலையில் சிலர் அமைதியாக இந்த செயல்களை கண்டித்து வருகிறார்கள்.


சில நடிகர்கள் தங்களது படங்கள் வெளியாகும் போது பொதுமக்களுக்கு இடையூறு வராதபடி நடந்துகொள்ளவும், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மிகப்பெரிய கட் அவுட் வைக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் சில நடிகர்கள் ரசிகர்கள் தங்களை கடவுளாக கொண்டாடுவதை ஊக்குவிக்கும் விதமாக மெளனம் சாதித்து வருவகிறார்கள்.