வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் "என்சி22 " படத்தின் கிரியேட்டிவ் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றின விவரம் ஏற்கனவே வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது  இணையவிருக்கும் புதிய நபர்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நாக சைதன்யா நடிக்கும் "என்சி22 " படத்தின் ஷூட்டிங் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியானது.  ஆனால் தற்போது தான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 




தமிழில் அறிமுகமாகும் நாக சைதன்யா :

இது இயக்குநர் வெங்கட் பிரபுவின் 11-வது திரைப்படம் மற்றும் தெலுங்கில் இயக்கும் முதல் திரைப்படமாகும். மேலும் இது நாக சைதன்யாவின் 22-வது திரைப்படம் மற்றும் முதல் தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தில் நாக சைதன்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 







படத்தில் இருக்கப்போகிறது மேஜிக் :

தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளரான எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள வெங்கட் ராஜன் எடிட்டிங் செய்யவுள்ளார். மேலும் இப்படத்தில் இடம் பெறப்போகும் மேஜிக் 'மேஸ்ட்ரோ' இளையராஜா மற்றும் 'லிட்டில் மேஸ்ட்ரோ' யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. தந்தை - மகன் இருவரும் இணைந்து இசையமைக்கும் முதல் திரைப்படம் இது தான் என்பதால் நிச்சயம் இது இசை பிரியர்களுக்கு விருந்தாக அமையும். 







லேட்டஸ்ட் அப்டேட்:

"என்சி22 " படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் சரத்குமார் இணைய உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது ஒரு முழு நீள ஆக்‌ஷன் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இப்படம் குறித்து வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மாநாடு , மன்மதலீலை திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் விபி 11 . இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.