‘பொன்னியின் செல்வன்’ படத்தை 150 நாட்களுக்குள் முடித்தோம் என ராஜமெளலியிடம் சொன்ன போது அவர் பயந்து விட்டதாக நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய ஜெயம் ரவி, “ என்னிடம் ஒரு சுவாரசியமான அனுபவம் இருக்கிறது. நான், ராஜமெளலி, மணிரத்னம் ஆகிய மூன்று பேரும் ஒரு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அப்போது நான் ராஜமெளலியிடம் நாங்கள் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களையும் 150 நாட்களில் எடுத்து முடித்துவிட்டோம் என்றேன். அதைக்கேட்ட ராஜமெளலி அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்து, தயவு செய்து அதை சொல்லாதே எனக்கு பயமாக இருக்கிறது என்றார். ஏனென்றால் பாகுபலி படத்தின் 2 பாகங்களை முடிக்க எனக்கு 5 வருடங்கள் ஆனது என்றார். முதலில் அதை அவரால் நம்பவே முடியவே இல்லை. அதன்பின்னர் அவர் இதை எப்படி உங்களால் செய்ய முடிந்தது, எப்படியெல்லாம் நீங்கள் வேலை செய்தீர்கள் போன்ற எல்லா விஷயங்களையும் மணிரத்னத்திடம் கேட்டு தெரிந்து கொண்டார். அப்படியான மாஸ்டர்தான் மணிரத்னம்” என்று பேசியிருக்கிறார்”
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து 'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது. இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது வரை படத்தின் பிரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.