நாட்டின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதில்லை. பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோக்கள் படங்கள் என பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், மலையாள சினிமா பேக்கேஜில் இருந்து நெட்ப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது நாயாட்டு (Nayattu) திரைப்படம்.


மே 8-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்ததோ இல்லையோ, சமீப காலமாக தேர்தல் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்தியில் நியூட்டன், தமிழில் மண்டேலா வரிசையில் மலையாளத்தில் இப்போது நாயாட்டு வெளியாகியுள்ளது.



கேரள மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நேரம். எனவே, பிரச்சாரம், வாக்கு அரசியல் என ஊரெங்கும் பரபரப்பாக உள்ளது. பிரவீன் மைக்கிலாக வரும் குஞ்சாக்கோ போபன், காவல்துறை வாகன ஓட்டுநராக பணி நியமனம் பெறுகிறார். அதே காவல் நிலையத்தில், உதவி துணை ஆய்வாளராக பொறுப்பில் இருப்பவர் மணியன் (ஜோஜு ஜார்ஜ்). முதல் அரை மணி நேரத்தில் இந்த கதாப்பாத்திரங்களின் குடும்பங்கள் பற்றிய அறிமுகமாக படம் தொடங்குகிறது.  


அதே காவல் நிலையத்தில் பணிபுரிவர் சுனிதா (நிமிஷா சஜயன்). அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தலித் இளைஞரின் மேல் நடவடிக்கை எடுக்கும்படி மணியனிடம் உதவி கேட்கிறார் சுனிதா. காவல் நிலையத்தில் சந்தித்து கொள்ளும் மணியன், மைக்கேல் மற்றும் அந்த இளைஞன் ஆகியோருக்கு இடையே சலசலப்பு ஏற்படவே, காவல் துறையினருக்கும் அந்த இளைஞன் சார்ந்திருக்கும் தலித் அமைப்பிற்கும் இடையே மோதல் வெடிக்கிறது.


இச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர் தலித் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால், சிக்கல் ஏற்படுகிறது. காவல்துறையினரான மைக்கேல், மணியன் மற்றும் சுனிதாவால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட விபத்தாக கட்டமைக்கப்படுகிறது.



இக்குற்றத்தில் இருந்து மூவரும் தப்பித்தனரா, உண்மை நிரூபிக்கப்பட்டதா என்பதே படத்தின் கதை. பொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாக குற்றங்களை மாற்றியமைக்கும் வழக்கத்திற்கு மாறாக, தேர்தல் நேரம் என்ற ஒரே காரணத்திற்காக குற்றவாளிகளாக கட்டமைக்கப்பட்டுள்ள காவல் துறையினரை கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்படுகிறது.


இந்த விபத்து காரணமாக மாநில முதலமைச்சரை சந்திக்கும் தலித் அமைப்பைச் சேர்ந்த தலைவர், “கல்லூரி கட்டித்தர வேண்டும் என்ற எங்களது பல வருட கோரிக்கையை இந்த முறையாவது நிறைவேற்றுங்கள்” என்கிறார். மற்ற நேரங்களில் இந்த அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அரசியல் தலைவர்கள், தேர்தல் நேரத்தில் மட்டும் பிரச்சனைகளை கையாள்வதாக சொல்லப்பட்டிருக்கிறது. தலித் இளைஞன் உயிரிழப்பு, குற்றவாளிகளாக கட்டமைக்கப்பட்டுள்ள காவல் துறையினர் கைது, வாக்கு அரசியல், தேர்தல் என அனைத்தும் ஒன்றோடு ஒன்றோடு இணைக்கப்படுவதன் அரசியலை படம் பேசுகிறது.


மேலும், அதிகார பொறுப்பில் இருந்தாலும், தேர்தல் வெற்றியை உறுதி செய்ய சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் அரசமைப்பின் அரசியலால் உண்மையை நிலைநாட்ட முடியாமல் போவதை பற்றியும் இப்படம் பேசுகிறது. “ரவுடிகளுக்கு கூட கட்டளைகளை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காவல்துறையினருக்கு அந்த சுதந்திரமும் இல்லை” என மணியன் சொல்வது படத்தில் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருக்கும்.



இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்படும்போது தப்பிக்க வேண்டும் என ஓடும்போதும், உண்மையை நிரூபிக்க போராடும்போதும், கையறு நிலையில் தவிக்கும்போதும் என குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் ஆகியோர் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர். முதலமைச்சராக வரும் ஜாஃபர், எஸ்.பி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள யாமா கில்மகேஷ், டி.ஒய்.எஸ்.பியாக வரும் மறைந்த நடிகர் அனில் நெடுமங்காட் என படத்தில் வரும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.


ஷாகி கபிரின் திரைக்கதையை இயக்குனர் மார்டின் பிரக்கட் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளார். கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் இப்படத்திலும் சிறப்பாக படம்பிடித்துள்ளார். சர்வைவல் த்ரில்லருக்கான சூழலை பார்ப்பவர்களுக்கு தனது இசையின் மூலம் சரியாக கடத்தியிருக்கார் விஷ்னு விஜய்.


கதை முடிந்த பிறகும் தொடர்ந்து அந்த வேட்டையில் இருந்து தப்பித்துக் ஓடிக்கொண்டிருப்பதான மனநிலையை தருகிறது. இந்த லாக்டவுன் டைமில், சுவார்ஸ்யமாக ஏதேனும் பார்க்க விரும்பினால், இரண்டு மணிநேரம் இருப்பின், கண்டிப்பாக நாயாட்டு பார்க்கலாம்.