விக்னேஷ் ஷிவன்


போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் ஷிவன். தொடர்ந்து நானும் ரவுடிதான் , தானா சேர்ந்த கூட்டம் , காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விக்னேஷ் ஷிவன். இந்த தம்பதியினருக்கு உயிர் ருத்ரோ நீல் மற்றும் உலக் தெய்விக் என இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில்  நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன்  நடிக்க இருக்கும் படம் எல்.ஐ.சி படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இநிநிலையில் கடந்த ஆண்டு தனக்கு எப்படிபட்டதாக இருந்தது என்பது குறித்து  இயக்குநர் விக்னேஷ் ஷிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


 நூற்றுக்கணக்கான அடிகள்...கோடிக்கணக்கான மிதிகள்






தனது இரண்டு மகன்களின் புகைப்படங்களை பதிவிட்ட விக்னேஷ் ஷிவன்  இப்படி பதிவிட்டுள்ளார் “நூற்றுக்கணக்கான அடிகள், கோடிக்கணக்கான மிதிகள் விழுந்தபோதும் எனது இரண்டு மகன்கள் மற்றும் என்னுடைய மனைவியின் அளவுக்கதிகமான அன்பு 2023 ஆம் ஆண்டை நான் கடக்க உதவியது. இவர்கள் என் வீட்டை அன்பாலும் பாசிட்டிவிட்டியாலும் நிரப்பினார்கள். எனது மகன்களின் சிரிப்புச் சத்தம் என் லட்சியத்தை நோக்கி நகரவைத்தது. கைவிட கடலளவு மனிதர்கள் இருக்கும் இதே இடத்தில் கைதர கையளவு மனிதர்கள் இருப்பது அழகு“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த ஆண்டு விக்னேஷ் ஷிவன் அஜித் குமாரை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தப் படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் தான் இயக்கயிருக்கும் எல்.ஐ. சி படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்களுடன் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.






மேலும் தன்னுடைய கணவர் மற்றும் இரு மகன்களுடன் நடிகை நயன்தாரா புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.