கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்ந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, 'நானும் ரௌடிதான்' படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற, 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது. அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறும் பகுதியில் அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
ரஜினி முதல் ஷாருக்கான் வரை
இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், நடிகர் ஜெயம்ரவி, இயக்குநர் மோகன் ராஜா, கலா மாஸ்டர், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், இயக்குநர் சிவா, கேமராமேன் வெற்றி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நடிகர் வசந்த், நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்சேதுபதி தனது மகளுடன் கலந்து கொண்டார். மேலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, இயக்குநர் கௌதம் மேனன் ஆகிய முக்கிய திரையுலக பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினர் .
திருப்பதியில் தொடங்குகிறது திருமண வாழ்க்கை
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடந்த தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணத்தை திருப்பதியில் நடத்த விரும்பி, சில காரணங்களுக்காக திருமண இடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகியோர் திருமணத்திற்கு முன் சில வாரங்களுக்கு முன்பு திருப்பதி சென்று தரிசனம் மேற்கொண்டு வந்தனர் குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த சில வருடங்களாகவே நயன்தாரா பல கோவில்கள் சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளார்.