நடிகை நயன்தாராவிடம் பத்திரிகையாளர் ஒருவர் அடுத்ததாக ஹனிமூன் எங்கே என்று கேட்க, அதற்கு அவர் வெட்கப்பட்டார்.
திருமணம் முடிந்தபின்பு முதல்முறையாக நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விக்னேஷ் சிவன், “, “கதை சொல்வதற்காக, இந்த ஓட்டலில்தான் நயன்தாராவை முதன்முதலில் சந்தித்து கதை பற்றி கூறினேன். அதனால் தான், உங்களை இங்கே சந்திக்க வேண்டும் என நினைத்தோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய நயன்தாரா ”திருமணம் முடிந்து விட்டது. உங்களுடைய சப்போர்ட் எங்களுக்கு எப்போதும் தேவை” என கூறி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் அடுத்ததாக ஹனிமூன் என்று கேட்க, அதிர்ச்சியான நயன்தாரா வெட்கப்பட்டு பதில் சொல்லாமல் கடந்து சென்றார்.
தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களிடம் பேசிய காட்சிகளை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்....
வெகுவிமரிசையாக நடந்த திருமணம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
ஒரு லட்சம் பேருக்கு உணவு
மேலும் திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் ஒரு லட்சம் பேருக்கு உணவளித்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் பயண தூரம், விஐபி பாதுகாப்பு போன்ற காரணங்களால் தேவஸ்தானம் அனுமதி மறுத்ததால் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது இதனிடையே திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர். குடும்பத்தோடு அங்கு வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல், நண்பகல் 12 மணிக்கு கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டார்.
அதன்பின் மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “ இந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ள விரும்பி கோவிலுக்கு வெளியே போட்டோஷூட் நடத்தினோம். இதனால் திருப்பதியிலேயே திருமணம் நடந்தது போல் உணர்ந்தோம். ஆனால் மக்கள் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோவில் வளாகத்தை விட்டு வெளியேறிய போதும், போட்டோ எடுக்கும்போது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை. தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை, இதனால் புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என விக்னேஷ் சிவன் அதில் குறிப்பிட்டு இருந்தார்.