நயன்தாரா நடித்து கோபி நயினார் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அறம் திரைப்படம் இன்றுடன் 6 ஆண்டுகளைக் கடந்துள்ளது. நானும் ரெள்டிதான் படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு, திருநாள், காஷ்மோரா டோரா உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இதனைத் தொடர்ந்து கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து வெளியான படங்கள் ஒன்று ஹாரர் அல்லது அவர்களை அதே ஆண் ஹீரோ பிம்பத்தில் காட்ட முயற்சித்தன. நேரடியாக மக்களின் சார்பில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் நயன்தாரா.
கதை
படத்தில் தொடக்கத்திலேயே அரசின் விதிகளை மீறியதாக தன்னுடைய உயர் அதிகாரியால் குற்றம் சாட்டப் படுகிறார் நயன்தாரா. கதை பின்னோக்கி நகர்கிறது விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றை சேர்ந்தவர்கள் சுமதி மற்றும் புலேந்திரன். எப்படியாவது தன்னுடைய மகனை படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் தந்தை. ஆனால் மகன் காயலில் நீந்துவதையே தன்னுடைய விருப்பமான ஒன்றாக வைத்திருக்கிறான். இந்த தம்பதியினரின் மகள் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட அந்த குழந்தையை மீட்பதில் இருக்கும் போராட்டமும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை எப்படி அரசால் உதாசீனப்படுத்தப்படுகிறது என்பதை மையமாக பேசும் படம் அறம். நேர்மையான ஒரு கலெக்டராக இருக்கும் நயன்தாரா தலைமை எடுத்து இந்த குழந்தையை மீட்க போராடுகிறார்.
அறம் படத்தில் மிகப்பெரிய பலம் மற்றும் பலவீனம் ஒன்றுதான். அது வெளிப்படையாக தன்னுடைய கருத்தை கதாநாயகியின் வழியாக பேசுகிறது. ஆனால் பல இடங்களில் அந்த வார்த்தைகள் வெறும் கருத்து வெளிப்பாடுகளாக மட்டுமே இருந்துவிடுவதுதான் அதன்குறையாக அமைந்தது. அதே நேரத்தில் இந்த வசனங்கள் மக்கள் மீதான ஒரு அரசின் அலட்சியத்தை மிகச் சரியான சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்கின்றன. உதாரணத்திற்கு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கச் செல்லும் தீயணைப்பு வாகணம் ஓரிடத்தில் மாட்டிக்கொள்கிறது. சாலை மேம்பாடு இல்லாததே இதற்கு காரணம். இப்படி ஒவ்வொரு சிக்கலும் அதன் பின் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனைகளை அடையாளம் காட்டுகின்றன. அந்த தருணங்களில் வசனமாக வெளிப்படுகின்றன.
இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நயன்தாரா. மிகத் தீவிரமான ஒரு சமூகப் பிரச்சனையை அடையாளம் காட்டிய ஒரு படமே அதற்கு தொடக்கமாக இருந்திருக்கிறது.