“உங்களுக்கு இன்று நிறைய பிரச்னைகள் இருக்கலாம். அது குடும்பம் சார்ந்த பிரச்னைகளாக இருக்கலாம்.. இல்லை வேலை சார்ந்த பிரச்னைகளாக இருக்கலாம்.. ஆனால் நீங்கள் உண்மையாக வேலை செய்தீர்கள் என்றால்.. உங்களுக்கு உண்மையாக இருந்தீர்கள் என்றால் கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்கையைத்தான் கொடுப்பார் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் நான்தான்” அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் நயன்தாரா சொன்ன வார்த்தைகள் இவை.. ஆம் அவர் சொன்ன வார்த்தைகள் அப்பழுக்கற்ற உண்மை. அது அவர் வாழ்கைக்கும் அப்படியே பொருந்துபவையே... ஒவ்வொரு முறை தான் வீழும் போதும் அந்த உண்மையைக் கொண்டே மறுபடியும் மறுபடியும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா..
சுற்றி முற்றி நம்பிக்கையில்லா மனிதர்களை கொண்டிருக்கும் திரையுலகில், தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நடிகர்களே தடுமாறிக் கொண்டிருக்கும் போது, 18 வருடங்களாக தனக்கான இடத்தை ஒரு பெண் தக்கவைத்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமில்லை..
கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது பார்ட் டைம்மாக மாடலிங்கிலும் கவனம் செலுத்திக்கொண்ருந்த நயன்தாராவை பார்த்த மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு தனது 'மனசினகாரே' படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற, நயன் தாராவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த நயன்தாரா 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தில் நடித்தார்.
தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட்டாக, அடுத்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் ஜோடி சேர்ந்தார். அந்தப் படமும் எகிடுதகிடு ஹிட்டாக, ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி, கள்வனின் காதலி, ஈ, வல்லவன் என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். ‘வல்லவன்’ படத்தின் போது சிம்புவும் நயன்தாராவுக்கு இடையே காதல் உருவானது.
அப்போது இருவருக்கு இடையேயான நெருக்கமான விஷயங்கள் சமூகவலைதளங்களில் வெளியாக, மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் நயன்தாரா.. ஒருக் கட்டத்தில் அந்தக் காதலும் முறிந்து போனது. காதல் தோல்வியாலும், விமர்சனங்களாலும் துவண்டு போயிருந்த நயன்தாரா இனி மீள்வது கடினம் என நினைத்த கோலிவுட்டுக்கு ‘பில்லா’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து “இஸ் ஜஸ்ட் தி பிகினிங்” என மாஸ் காட்டினார் நயன். அடுத்ததாக வெளிவந்த யாரடி நீ மோகினி படமும் பம்பர் ஹிட்டடிக்க, நயன் தாராவின் கோலிவுட் கிராப்.. அஜித்தின் ‘ஏகன்’விஜயின் ‘வில்லு’ என அடுத்தக்கட்டத்தை தொட்டது.
வில்லுப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் காதல் வயப்பட மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கினார் நயன்.. இம்முறை மிக மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தனது காதலுக்கு உண்மையாக இருந்த நயன்தாரா, தனது கைகளில் பிரபுதேவாவின் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டதோடு சினிமா வாழ்கையிலும் இருந்து விலகவும் முடிவு எடுத்தார். திரையுலகில் நம்பர் 1 இடத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த நயனின் முடிவு அப்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அதன் பின்னர் நயன் தாரா பிரபுதேவாவுக்கு இடையே எழுந்த பிரச்னைகள், ராம்ராஜ்ஜியம் படத்தில் நடித்ததற்காக சந்தித்த விமர்சனங்கள் எல்லாம் அடுத்தடுத்து நயன் தாராவின் வாழ்கையை பதம் பார்த்தது. ஒரு கட்டத்தில் பிரபுதேவாவுடனான காதலும் முறிந்து போனது..
‘இனி அவ்வளவுதான் நயன் கேரளாவுக்கு நடையை கட்டுங்கள் கொக்கரித்தது கோலிவுட்’ ஆனால் முன்பை விட இன்னும் வீரியமாக ‘ராஜா ராணி’யில் எண்ட்ரி கொடுத்தார் நயன்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க.. கொக்கரித்த கோலீவுட் பின்னாளில் அவரது கால்சீட்டுக்காக காத்துக்கிடந்தது தனிக்கதை..
இம்முறை திட்டத்தை மாற்றிய நயன்தாரா கணமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். வெறும் கிளாமருக்கும், 4 பாடல்களுக்கு ஹீரோயினை பயன்படுத்தும் கோலிவுட்டை, தனக்காக கதை எழுத வைத்தார். அப்படி அவர் நடித்த ‘மாயா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’ ரசிகர்களிடம் வரவேற்பை லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். இவருக்கென ரசிகர் பட்டாளம் தியேட்டரில் திரள, நயனை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கும் இயக்குநர்களும் நயனுக்கான இடத்தை கொடுக்க மெனக்கெட்டனர். தொடர்ந்து
நானும் ரெளடிதான் படத்தில் காதம்பரியாக குயிட் காட்டிய நயன், இருமுகனில் ஸ்டைலிஷ் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து மூக்குத்தி அம்மனில் வித்தியாசம் காட்டிய, நெற்றிக்கண்ணில் வியக்க வைத்தார்.. விக்னேஷ் சிவனுடனான காதலில் உண்மையை உணர்ந்திருக்கும் நயன் தனது அடுத்த இன்னிங்ஸை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்...
நீங்கள் இங்கு எதை பேச வேண்டுமாலும் இங்கு ஜெயித்து விட்டுத்தான் பேச வேண்டும்... அப்போதுதான் அதற்கு மதிப்பு.. ஒரு காலத்தில் தன்னை வார்த்தைகளால் பதம்பார்த்தவர்களையும் , தனது உருவ பொம்மைகளை எரித்தவர்களையும் தனது வெற்றியின் மூலம் இன்று லேடி சூப்பர் என கத்தவும், தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வைத்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன் வானத்தை தாண்டி சிகரத்தை நோக்கி பறக்க வாழ்த்துக்கள் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா