பட்டப்பெயரை மறுக்கும் நடிகர்கள்:


சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகர், நடிகைகளை பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழக்கம். சினிமாவில் நடிப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டங்களில் நடிகர், நடிகைகள் தங்களை பட்டப்பெயர் வைத்து அழைக்க வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். அதில் அஜித் தன்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் என்றும், ஏகே அல்லது அஜித் குமார் என்று அழைத்தாலே போதுமானது என்று கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டு தெரிவித்தார்.


அவரைத் தொடர்ந்து கமல் ஹாசன் கூட கடந்த மாதம் தன்னை உலக நாயகன் என்கிற பெயரில் யாரும் அழைக்க வேண்டாம் கமல் அல்லது கமல்ஹாசன் என அழைக்கும் படி தெரிவித்தார். இப்படி ஒவ்வொரு நடிகர்களும் தங்களை பெயர் சொல்லி மட்டுமே அழைத்தால் போதும் என்றும், பட்டப்பெயர் வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது நயன்தாராவும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.


லேடி சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம்:


இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டாம் என்று பல ஆண்டுகளாக நயன்தாரா கேட்டுக் கொண்டு வருகிறார். அது கடந்த 5, 6 ஆண்டுகளாக பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.




கெஞ்சிய நயன்தாரா:


இது குறித்து நயன்தாரா ஒருமுறை கூறுகையில்: டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போடுவதால் நான் படும் கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும். கடந்த 5, 6 வருடங்களாக இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் லேடி சூப்பர் ஸ்டார் என்று பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறேன். அவர்களிடம் கெஞ்சியிருக்கிறேன்.


யாருடைய பட்டப்பெயரையும் நான் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காமல் ஒருநாள் இரவு நன்கு யோசித்து இது தான் என்னுடைய தலைப்பு என்று நான் சொன்னது போல் சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனால் இது தானாகவே நடந்தது. 


பெண்களை மையப்படுத்திய கதையில் நான்:




நான் ஹீரோக்களை சார்ந்து இல்லை. பெண்களை மையபடுத்திய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அந்தப் படங்கள் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். பெரிய பெரிய நடிகர்களுடன் இணைந்து நான் நடித்த போதிலும் எனக்கும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். சக நடிகர்களின் ரசிகர்கள் தான் எனக்கும் ரசிகர்களாக இருப்பதாக நான் உணர்கிறேன். எனக்கு எந்த ஒரு பட்டை பெயரின் அங்கீகாரமும் தேவையில்லை என்பது போல் நயன்தாரா கூறியுள்ளார். ஆனால் அதை மீறி சிலர் தங்களுடைய பெயருக்கு முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் என பயன்படுத்துவதை அவரால் தவிர்க்க முடியவில்லை என்பதே நயன்தாராவின் நிலைப்பாடாக உள்ளது.