கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் கனமழைபெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணையில் ஒரே நாளில் 6 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.




முல்லை பெரியாறு அணை நிலவரம்


பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணைநீர்மட்டம் டிச. 12ம் தேதி காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.40 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 397.50 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை திடீரென உயர்ந்த நீர்வரத்தால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6அடி உயர்ந்து 125.40 அடியானது. அணையின் நீர்இருப்பு 3,509 மில்லியன் கனஅடியாக இருந்தது. மழை தொடரும் பட்சத்திலும் நீர்மட்டம் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.




வைகை அணை நிலவரம்


அதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி செல்லும் வழியில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து உள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 55.25 அடியாக உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.


அணைக்கு வினாடிக்கு 10,347 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 71 அடி; தற்போது 55.25 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.மேலும்அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.




மஞ்சளார் அணை நீர் வரத்து


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல்  பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து  நேற்று காலை முதல் அதிகரித்து, அணையின் நீர்மட்டம்  52 அடியில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கி  இன்று காலை 8 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 57 அடியில்  55 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீரை மஞ்சளார் ஆற்றில்  பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர்.


தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 672 கன அடியாக உள்ள நிலையில்  மஞ்சளார் ஆற்றில்  566 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான  தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு விருவீடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை விவரங்கள்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு  ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.




மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மஞ்சளார்  ஆற்றில்  நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியாக உள்ள நிலையில்  மஞ்சளார் அணைக்கு வரும் நீர்வரத்து  672 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 566 கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் 4.2 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.