நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி (Annapoorani) திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.


அன்னபூரணி படக்குழு


நடிகை நயன்தாராவின் 75ஆவது படமான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் இரிந்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.


நடிகை நயன்தாராவின்  75ஆவது படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியான நிலையில், மிக்ஜாம் புயல், தென் மாவட்ட மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. வசூல்ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்ற இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த டிச.29ஆம் தேதி வெளியானது.


படத்தின் கதை


செஃப் ஆக விரும்பும் பிராமணக் குடும்பத்து பெண்ணாக நயன்தாரா இப்படத்தில் நடித்திருந்த நிலையில், தன் கனவு வேலைக்காக தான் அசைவ உணவு சமைக்கும் வகையிலும், அசைவ உணவை ருசி பார்க்கும் வகையிலும் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.


மேலும் நயன்தாராவின் இஸ்லாமிய நண்பராக ஃபர்ஹான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருந்த நிலையில், ராமர் வனவாசத்தின் போது அசைவம் சாப்பிட்டார் என்றும், எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாது என சொல்லவில்லை என அந்தக் கதாபாத்திரம் கூறும் வகையிலும் இக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல் களைமாக்ஸ் காட்சியிலும் பிராமணப் பெண்ணான நயன்தாரா புர்கா அணிந்து தொழுது பிரியாணி சமைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.


இந்தக் காட்சிகள் படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.


ராமர் பிரச்னை


இந்நிலையில் அன்னபூரணி திரைப்படம் ஆண்டி இந்து திரைப்படம் என்றும் லவ், ஜிஹாத் பிரச்னையை இத்திரைப்படம் ஊக்குவிப்பதாகவும், இப்படத்தின் மீதும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ ஃபைவ் நிறுவனங்களின் மீதும் மும்பை காவல்துறையிடம் முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி முன்னதாக புகாரளித்திருந்தார்.


இந்நிலையில், நெட்ஃப்ளிஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சர்ச்சை குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்புக்கு ஜீ நிறுவனம் சார்பில் பகிரப்பட்டுள்ள அறிக்கையில், மேற்குறிப்பிட்ட காட்சிகளை மறு படத்தொகுப்பு செய்வது குறித்து தாங்கள் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், அதுவரை  நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி படத்தினை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தது.


மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம்


மேலும், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர்களாக தங்களுக்கு இந்து மதத்தினர் மற்றும் பிராமண சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் எந்த நோக்கமும் இல்லை என்றும், அப்படி ஏதேனும்  அவர்களது உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Nayanthara: "சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு" - புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!


Merry Christmas: விஜய் சேதுபதியின் “மேரி கிறிஸ்துமஸ்” நாளை ரிலீஸ்.. இந்த காரணத்துக்காகவே தியேட்டரில் பார்க்கலாம்..!