அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியை ஒட்டி, 1,00,008 வடை மாலை கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்யப்படுள்ளது. மேலும் கோயில் பிரகாரம் முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வானர குலத்தை சேர்ந்த அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தவர் அனுமன். இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமன் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அனுமன் ஜெயந்தி விழாவான இன்று உலகம் முழுவதும் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மேலும், நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது. காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர், பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டவுள்ளது. அதனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்கான ஏற்பாடுகளும் கோயில் தரப்பில் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடக மாநில பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்து வருகின்றனர்.
அனுமன் ஜெயந்தி அன்று ராமர் கோவில், பெருமாள் கோவில் அல்லது அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். முடிந்தவர்கள் வடைமாலை சாற்றி வழிபடலாம். இந்த நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் நினைத்த காரியல்களில் வெற்றி கிடைக்கும். ஸ்ரீராம ஜெயம் எழுதியும் மாலை கட்டி போடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அனுமன் படத்தை மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து, துளசி சாற்றி வழிபடலாம். நைவேத்தியமாக அவல், பொரி, கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபடலாம்.
அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீராம ஜெயம் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கலாம். ஸ்ரீராம ஜெயம் எழுதுவதும், சுந்தர காண்டம் படிப்பதும் மிக நல்ல பலனை கொடுக்கும். அனுமனுக்குரிய மந்திரங்கள், அனுமன் சாலிசா படிப்பது மிகவும் சிறப்பானது. அனுமன் ஜெயந்தி அன்று இது போல் அனுமனை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பெருகும். திருமண தடை உள்ளிட்ட அனைத்து தடைகளும் நீங்கி, எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் பெருகும். மன பயங்கள் நீங்கி, தைரியம் பிறக்கும்.