பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' என இரு ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தியது. 


அதே போல 2024ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படமும் நேரடியாக மோதிக்கொள்ள களம் இறங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் மேரி கிறிஸ்துமஸ், மிஷன் சாப்டர் 1, குண்டூர் காரம், நா சாமி ரங்கா, ஹனுமன் உள்ளிட்ட  படங்களுமே நாளை  வெளியாக உள்ளன. 


 



மிரட்டலான கேப்டன் மில்லர் :


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோரின் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் பீரியட் படமாக உருவாகியுள்ளது 'கேப்டன் மில்லர்'. இப்படத்தின் மிரட்டலான டிரைலர் சமீபத்தில் வெளியாகி  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 


 


கிராபிக்ஸ் நிறைந்த அயலான் :


கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. அட்வான்ஸ்ட் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள அயலான் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் தமிழ் சினிமாவில் வெளியான எந்த ஒரு திரைப்படத்திற்கும் இந்த அளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்படவில்லை என பிரிவியூ ஷோ பார்த்த பிரபலங்கள் கூறுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 


 



FDFS காட்சி :


இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியும் நெருங்கி வருவதால் டிக்கெட் முன்பதிவு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் FDFS காட்சி குறித்து தெரிந்து கொள்வதற்காக மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள் திரை ரசிகர்கள். 


அதிகாலை காட்சி ரத்து :


கடந்த ஆண்டு அஜித்தின் 'துணிவு' திரைப்படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் காரணமாக காலை காட்சிகளுக்கு அரசு அனுமதி கொடுப்பதை ரத்து செய்தது. அதை தொடர்ந்து வெளியான ஜெயிலர், லியோ என எந்த திரைப்படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க படவில்லை. காலை 9 மணி முதல் தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


அரசு வெளியிட்ட அறிக்கை :


அதே போல கேப்டன் மில்லர் மற்றும் அயலான் திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளும் காலை 9 மணிக்கு திரையிடப்படும். ஜனவரி 12ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் தினம்தோறும் 5 காட்சிகள் திரையிடப்படும் என்றும் இரவு காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இருப்பினும் தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இப்படங்கள் காலை 6 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இந்த அறிக்கை தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.