நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையிலுள்ள பாடிகாட் முனீஸ்வரனுக்கு சென்றது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரெளடிதான் படத்தில் நடித்த போது, அந்தப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட 7 வருடங்களை கடந்து காதலித்து வரும் இந்த ஜோடி வெளிநாடுகளுக்கு ஜோடியாக செல்வது, இணைந்து படங்களை தயாரிப்பது என பரஸ்பர மரியாதையுடன் காதலித்து வருகிறது.
கடவுள் பக்தி அதிகம் கொண்ட விக்னேஷ் சிவன், அவ்வப்போது நயனுடன் இணைந்து கோயில்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இருவரும் சென்னையிலுள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளனர். காரணம் என்னவென்று விசாரித்தால், புதிய இனோவா வாங்கிய இந்த ஜோடி அதற்கு பூஜை போடுவதற்காக அங்கு வந்திருக்கிறது. அப்போது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்களும், வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா (nayanthara) நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமாந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 28-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.