கேரள மாநிலம் கொச்சியில் சாலையில் நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது இருசக்கர வாகனம் மோதியதைக் கண்டு, யானை அலறியடித்து பயந்து ஓடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை இரவு நேரத்தில் நடந்தது. நடந்து சிறிது நேரத்திற்கு வைப்பின் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் உள்ள வைப்பினில் மகாதேவர் கோவிலில் சிவராத்திரி பூஜைக்காக யானை அழைத்து வரப்பட்டது. அங்கு லாரியில் சென்று இறங்கிய யானை, சாலையில் நின்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. பல வாகனங்கள் யானை செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்து ஒரு யானைப்பாகன் மீது மோதியது. அந்த ஒரு சக்கர வாகனத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் வந்திருந்தார்.






அந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றுக் கொண்டிருந்த யானைப்பாகன் மீது மோதியது என்று கூறப்படுகிறது. அதில், மோதப்பட்ட யானைப் பாகன் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். ஸ்கூட்டரில் வந்த பெண்ணும் அவரது குழந்தையும் யானையின் கால்களில் வண்டியுடன் சாய்ந்தனர். யானை பாகன் விழுந்ததைக் கண்டு மிரண்ட அந்த யானை சாலையிலேயே ஓடத்துவங்கியது. அந்த யானை ஓடும்போது மற்றொரு யானைப்பாகன் அதன் மீது அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருக்கும்போதே அங்கிருந்து தெறித்து ஓடியது யானை. யானை மிரண்டு ஓடுவதை கண்டு அஞ்சிய மக்களும் வெவ்வேறு திசைகளில் வாகனத்தை விட்டு விட்டு ஓடினர்.






அதன்பிறகு யானையை கொண்டு வந்த மற்ற யானைப் பாகன்கள் யானையை துரத்திக்கொண்டு ஓடினர். கொஞ்ச தூரம் ஓடிய யானை அமைதியானது. இந்த விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிக்கொண்டுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உட்பட குழந்தை மற்றும் யானைப்பாகன் ஆகியோருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப் பட்டன. யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. யானை சகஜ நிலையில் வைப்பின் மகாதேவர் கோவிலுக்கு சென்று சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.