தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவை ஒரு முக்கிய ஒரு பங்கு வகிக்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை. அப்படி என்றால் அதில் தனக்கென ஒரு தனி ராஜாங்கத்தை உருவாக்கி அதில் திரை ரசிகர்களை சிரிப்பொலியில் அனைவரையும் சிறைவைத்து கட்டிப்போட்டவர் நடிகர் நாகேஷ். 


 



ஹீரோ டூ வில்லன் :


நகைச்சுவையின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நாகேஷின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்று. நகைச்சுவை மட்டுமின்றி சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்தவர். அவரின் நடிப்பு பசிக்கு சரியான தீனி கொடுத்தவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர். ஹீரோவாக, நகைச்சுவை நடிகராக சிரிக்க வைக்க முடிந்த இவரால் அசாதாரணமான வில்லனாகவும் நக்கலாக நடிக்க முடியும் என்பதை நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' மற்றும் ரஜினிகாந்த்தின் 'அதிசய பிறவி' திரைப்படம் மூலம் நிரூபித்தவர். பல மொழிகளிலும் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த மகா கலைஞன். 






நடிப்பு ஜாம்பவான் :


நடிகர் சிவாஜி கணேசன் காலத்தில் தொடங்கிய இவரின் திரை பயணம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் அஜித் - விஜய் படங்கள் வரையில் தொடர்ந்த இந்த கலைஞன் ஒரு சிறந்த டான்சர். தனக்கென ஒரு தனி ஸ்டைல் கொண்டவர். ஒரு பிணமாக கூட இந்த அளவிற்கு நடிக்க முடியுமா என மகளிர் மட்டும் திரைப்படம் மூலம் ஆச்சரியப்படுத்தி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நாகேஷ். ஒல்லியான உருவம் கொண்டு இருந்தாலும் தனக்குள் ஏராளமான திறமைகளை உள்ளடக்கிய இந்த ஜாம்பவான் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு பல இடங்களில் ஏறி இறங்கி அவமானங்களை சந்தித்தாலும் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்க்கையில் ஜெயித்தவர். 






 


தொடர் சிக்ஸர்களின் தாக்குதல் :


சிறிய கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக நடிக்க கூடியவர். நாகேஷ் - மனோரமா காம்பினேஷன் என்றுமே சூப்பராக ஒர்க் - அவுட் ஆகும் என்பது பல முறை நிரூபணமாகியுள்ளது. திருவிளையாடல், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர்நீச்சல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு என நீண்டு கொண்டே போகும் அவரின் லிஸ்ட். ஒரு பிரேக் எடுத்து கொண்ட நடிகர் நாகேஷ் ரீ என்ட்ரி கொடுத்து அவ்வாய் சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், இந்திரன் சந்திரன், நம்மவர் என அடுத்தடுத்து சிக்ஸர்களை அடித்து அசர வைத்தார். இன்றும் அவர் நடித்த ஏராளமான படங்கள் தலைமுறையை கடந்தும் பேசப்படும். அவரின் உடல் மொழியை, குரல் ஜாலம், டைமிங் சென்ஸ் இவற்றை அடித்து கொள்ள ஆளே இல்லை. அடைமொழி இருந்தால் தான் காமெடி நன்றாக இருக்கும் என இருந்த ரூல்ஸை தகர்த்து அடைமொழி வசனங்கள் இல்லாமலும் சிரிக்க வைக்கலாம் என்பதை நிரூபித்தவர்.  


தேசிய விருது :


ஒரு நடிகன் என்பதை காட்டிலும் அவர் ஒரு சிறந்த கலைஞன் என்பதே சரியானதாகும். எத்தனை விருதுகள், ஷீல்டுகள் வாங்கி குவித்தாலும் அதை ஷோகேஸில் வரிசைப்படுத்தி வைத்து அழகு பார்க்கும் பழக்கம் இல்லாதவர் நாகேஷ் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். 30 ஆண்டுகளாக நடிப்பை சுரந்த இந்த நடிப்பு சுரபிக்கு ஒரே ஒரு தேசிய விருது மட்டுமே 'நம்மவர்' திரைப்படத்திற்காக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும் இன்றும் திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் இவருக்கு இருக்கும் இடத்தை யாராலும் வெல்ல முடியாது என்பது தான் நிதர்சன உண்மை. ஒரு கலைஞனுக்கு அது தானே மிகப்பெரிய விருது !!!