தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.1979, 1980,1982 இந்த வரிசையில் முதல் மூன்று அனல் மின் உற்பத்தி அலகுகளும் தொடங்கப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளை கடந்தும் தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. 1991,92 இந்த வரிசையில் 4-வது மற்றும் 5-வது மின் உற்பத்தி அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் 30 ஆண்டுகளை கடந்து இந்த யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் (Shore Unloader) செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தற்போது, தூத்துக்குடி துறைமுகம் தளம்-1 மற்றும் தளம் 2-ல் நிலக்கரியை கையாள்வதற்கு சுமார் 50,000 மெட்ரிக் டன் முதல் 55,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றிற்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் (5x210 மெகாவாட்) முழு அளவில் மின் உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெறுவதற்காகவும், தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் 70,000 மெட்ரிக் டன் முதல் 75,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களிலிருந்து நிலக்கரியை விரைவாக இறக்குவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் 325 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இப்புதிய இயந்திரங்கள் வாயிலாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றிற்கு 70,000 டன் முதல் 75,000 டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடிவதால் நிலக்கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றிற்கு ரூ.700-லிருந்து ரூ.540 ஆக குறையும். இதனால், ஆண்டொன்றிற்கு சுமார் 80 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சேமிப்பாகக் கிடைக்கும்.