தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த ராணியின் மகளான தார்னிகா, “கொம்பு சீவி” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். 

Continues below advertisement

கொம்பு சீவி படம்

தமிழ் சினிமாவில் ஹரிகுமார் நடித்த திருத்தம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாலும்,  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் பொன்ராம். இவர் தொடர்ந்து ரஜினி முருகன், சீம ராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி ஆகிய படங்களை இயக்கினார். சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய 3 படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீதமுள்ள படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இதனால் மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் “கொம்பு சீவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். 

இதில் ஹீரோவாக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சரத்குமார் இடம் பெற்றுள்ளார். மேலும் காளி வெங்கட், கல்கி ராஜா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் கொம்பு சீவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தார்னிகா அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார். படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் கொம்பு சீவி டிசம்பர் 19ம் தேதி வெளியாகிறது. 

Continues below advertisement

நடிகை ராணியின் மகள்

இந்த தார்னிகா வேறு யாரும் இல்லை. 90களில் புகழ் பெற்ற நடிகையாக இருந்த ராணியின் மகள் தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து பட்டித்தொட்டியெங்கும் புகழ்பெற்ற அந்த ராணி தான். ராணியைப் பலருக்கும் நாட்டாமை படம் மூலம் தான் ஞாபகம் இருக்கலாம். ஆனால் 90களின் காலக்கட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 5 மொழிகளிலும் அவர் நடித்திருக்கிறார். 1992ம் ஆண்டு ஜானி வாட்கர் என்ற மலையாள படம் மூலம் சினிமாவுக்கு நுழைந்த அவர் அதே ஆண்டில் ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இந்த படத்தில் கூட “கலைவாணியோ.. ராணியோ” என்ற பாடல் அவருக்காகவே வைக்கப்பட்டது போல இருக்கும். ஆனால் அவர் அதன்பின் புகழ் பெற்ற நடிகையாக மாறவில்லை. ஐ லவ் இந்தியா, நாட்டாமை, பதவி பிரமாணம், நம்ம அண்ணாச்சி, ராசையா, கர்ணா, அந்த நாள், அவ்வை சண்முகி என பல படங்களில் நடித்தார். இதில் நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரும், அவ்வை சண்முகி படத்தில் கௌசல்யா என்ற ஜெமினி கணேசனின் வீட்டு வேலைக்காரி கேரக்டரும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. 

இதன்பின்னர் தனது சினிமா பாதையை கவர்ச்சி ரூட்டுக்கு மாற்றிய ராணி, காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற “வெள்ளரிக்காய்” பாடல் மூலம் புதிய பரிணாமம் எடுத்தார். பின்னர் நெஞ்சினிலே, உயிரிலே கலந்தது, கேம், காதல் சடுகுடு, வர்ணஜாலம், பந்தயம், ருத்ரமாதேவி, பக்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் ஜெமினி படத்தில் “காமினி” என்ற கேரக்டரில் நடித்து “ஓ போடு” பாடல் மூலம் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கும் பரீட்சையமானார் என்பது குறிப்பிடத்தக்கது.