திருநெல்வேலி அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

குவாரிகளில் பணி செய்யும் வெளிமாநிலத்தவர்

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. இந்த ஊரானது ஸ்ரீவைகுண்டம் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு ஏகப்பட்ட கல் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளது. இதனால் வெளிமாவட்ட, வெளி மாநில இளைஞர்கள் அதிகளவில் தங்கி பணி செய்து வருகிறார்கள். சிலர் இங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக தங்கியிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் பணி செய்ய வந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் தான் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் குறிப்பிட்ட தொகையை அவர் கமிஷனாகவும் பெற்றுள்ளார். 

Continues below advertisement

வேலை இடத்தை மாற்ற முடிவு

இதற்கிடையில் தாங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என்றதும் அந்த அசாம் தம்பதியினர் இடத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஏஜெண்டிடம் பேசும்போதும் கூட இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதால் வேலை செய்ய விருப்பம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் தாங்கள் கேரள மாநிலத்தில் வேறு வேலைக்கு செல்கிறோம் எனவும் அவரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த ஏஜென்ட் நபர் கோபமடைந்து நீங்கள் கல் குவாரியில் தான் வேலை செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். 

ஆனால் அவர் பேச்சை கேட்காமல் அந்த தம்பதியினர் திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலமாக கேரளா செல்ல திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் இருந்த அரசன் குளம் பகுதியில் இருந்து நெல்லை ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றனர். இதனையறிந்த ஏஜென்ட் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டியும் இந்த தம்பதியினர் கேட்கவில்லை. 

கணவர் கண்முன்னே கொடூரம்

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் இரண்டு சிறுவர்களை தனது பைக்கில் அழைத்துச் சென்று சிவந்திப்பட்டி அருகே காத்திருந்தார். அப்போது அந்த தம்பதியினர் வந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளார். அவர்கள் பணத்தை திருடி விட்டு தப்பிக்க பார்க்கிறார்கள் என கூறி வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளார்கள். அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கணவரை கடுமையாக தாக்கிய நிலையில் அவரின் கண் முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடினர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணையை தொடங்கிய அவர்கள் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.