தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு கிடைத்த தேசிய விருதை காஷ்மீரில் உள்ள இந்துக்களுக்கு சமர்ப்பிப்பதாக அந்த படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். 


69வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான திரைப்படமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த நிலையில் படத்துக்கு கிடைத்த வெற்றி குறித்து அதன் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பேசியுள்ளார். அதில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் பத்துக்கு கிடைத்த தேசிய விருது அங்கீகாரத்தை, தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காஷ்மீர் இந்துக்களுக்கும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். 


விருது கிடைத்தது குறித்து அமெரிக்காவில் இருந்த அவர் தொலைப்பேசி மூலம் பேசியுள்ளார். அதில், ”தேசிய திரைப்பட விருது இந்தியாவின் மிக உயர்ந்த விருது. எப்பொழுதும் நான் கூறுவது, தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்னுடைய திரைப்படம்  இல்லை. அது மக்களின் திரைப்படம். நான் ஒரு இடைப்பட்ட கருவி மட்டுமே.


இந்த வெற்றி, தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு சொந்தமானது. தீவிரவாதிகளுக்கு எதிராக காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் குரல் எழுப்பியுள்ளனர். அவர்களின் வலியை கூறும் குரல்கள் இந்த வெற்றி மூலம் உலகம் முழுவதும் கேட்க தொடங்கியுள்ளது. இரவு, பகல் என பார்க்காத எங்களின் உழைப்புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் எங்களுக்கு கிடைத்த இந்த வெற்றியை காஷ்மீரில் உள்ள இந்துக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என கூறியுள்ளார். 


கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் மிதுன் சர்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1990ம் கால கட்டத்தில் காஷ்மீரில் வசித்த பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை பேசும்படமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் வெலியானதில் இருந்து பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும், காஷ்மீர் இஸ்லாமியர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதாகவும் படத்தின் மீது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. சர்ச்சையான கருத்துகளும் முன் வைக்கப்பட்டன. 


மேலும் படிக்க: National Film Awards 2023 Winners: தேசிய விருது: சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர்: மொத்த லிஸ்ட்டும் இதுதான்!