‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய  மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.


69வது தேசிய விருதுகள்


2021ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் தான் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் சினிமாவில் இருந்து குறிப்பிடத்தகுந்த வகையில் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.


 


கடைசி விவசாயி






 


இந்நிலையில் சிறந்த தமிழ் மொழி படத்துக்கான தேசிய விருதும், மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் விருதும் வழங்கப்பட்டுள்ளது.


யோகிபாபு, விவசாயி நல்லாண்டி, விஜய் சேதுபதி நடித்த இந்தப் படம் ஒரு ஊரில் எஞ்சி இருக்கும் கடைசி விவசாயி ஒருவரின் கதையைப் பேசியது. எந்த வித அந்நிய திரைப்படங்களில் சாயலும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் உருவாக்கப் பட்டிருந்தது.


குறைவான பொருட்செலவில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக மக்களிடையே பாராட்டுக்களை குவித்தது.  தனது கரியரின் தொடக்கத்தில் இருந்தே ஆக்கப்பூர்வமான திரைப்படங்களை எடுத்துவரும் மணிகண்டன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டார்.


தற்போது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ள கடைசி விவசாயி திரைப்படம் அவருக்கு தகுந்த அங்கீகாரத்தை வழங்குவதாக அமைந்துள்ளது என்பது ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. 


 நல்லாண்டி தாத்தா


இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவசாயியாக நடித்த நல்லாண்டி தாத்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை நடிக்க வைக்க தனக்கு எண்ணம் இருந்ததாகவும் பின் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் இயக்குநர் மணிகண்டன் தெரிவித்தார்.


பின் இந்த விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்க நிஜமான ஒரு விவசாயியான நல்லாண்டியைத் தேர்வு செய்தார். இதுவரை எந்த படத்திலும் நடித்திராத நல்லாண்டி தனது முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் மக்களைக் கவர்ந்திருந்தார்.


ஆனால் துரதிஷ்டவசமாக தான் நடித்த படம் வெளியாவதற்கு முன்பாகவே காலமாகிவிட்டார். தற்போது இன்று சிறப்புப் பிரிவின் கீழ் நல்லாண்டிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது.


இயக்குநர் மணிகண்டன்


காக்கா முட்டை திரைப்படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை திரைப்படம் சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படத்திற்கான விருதை வென்றது. இதனைத் தொடர்ந்து குற்றமே தண்டனை , ஆண்டவன் கட்டளை உள்ளிட்டப் படங்களை இயக்கினார் மணிகண்டன். தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கடைசி விவாசாயி படத்தை இயக்கினார் மணிகண்டன்.