இனிமையான குரலால் ஏராளமான மொழிகளில் பாடி இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக அனைவரையும் மயக்கியவர் ஸ்ரேயா கோஷல். தமிழ் சினிமாவில் இளையராஜா தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா,மணி சர்மா, கார்த்திக் ராஜா, விஜய் ஆண்டனி, டிஎஸ்பி  உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் 200க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். 



சிறந்த பின்னணி பாடகி :


தன்னுடைய மாய குரலால் மயக்கிய ஸ்ரேயா கோஷலுக்கு மீண்டும் ஒரு முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 69வது தேசிய திரைப்பட விருதுகள் பெறுவோரின் பட்டியல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. பலரும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதை தட்டிச்சென்றுள்ளனர். அந்த வரிசையில் கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற 'மாயவா தூயவா' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரேயா கோஷலின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.


ஐந்தாவது தேசிய விருது :


மாய குரலழகி ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகியாக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். அந்த வகையில் தேசிய விருதை அவர் ஐந்தாவது முறையாக பெறுகிறார் என்பது பெருமைக்குரிய ஒரு விஷயம். 2003-ஆம் ஆண்டு அவர் பாடகியாக அறிமுகமான முதல் படமான சஞ்சய் லீலா பன்சாலியின் 'தேவதாஸ்' திரைப்படத்திற்காக அவர் பாடிய "பயிரி பியா" என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக முதன் முதலில் தேசிய விருதை பெற்றார்.   



எந்தெந்த பாடல்கள் :


2006ம் ஆண்டு 'பஹேலி' என்ற ஹிந்தி படத்தில் இடம் பெற்ற  "தீரா ஜ்ல்னா" பாடலுக்கும் 2008ம் ஆண்டு வெளியான "ஜப் வீ மெட்" படத்தில் இடம்பெற்ற "யேஹ் இஸ்க் ஹாயே" பாடலுக்கும் தேசிய விருது பெற்றார். 2010ம் ஆண்டு 'ஜோக்வா' மராத்தி படத்தில் "ஜீவி ரங்காலா" பாடலுக்காகவும், 'அந்தஹீன்' என்ற பெங்காலி படத்தில் இடம்பெற்ற "பெராரி மான்" பாடலுக்காகவும் நான்காவது முறையாக தேசிய விருதை வென்று இருந்தார்.   


அந்த பட்டியலில் தற்போது 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெற்ற 'மாயவா தூயவா' பாடலும் இணைந்துள்ளது. அளவுகடந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இந்த வெற்றி மேலும் மேலும் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் ஸ்ரேயா கோஷல் பெரும் தேசிய விருதுகளை ஒரு பெரிய லிஸ்ட்டாக போடவேண்டியிருக்கலாம்.. வாழ்த்துக்கள்..