Kadaisi Vivasayi: கடைசி விவசாயி படம் தேசிய விருதை பெற்றதால் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்த படத்தின் முக்கிய கேரக்டராக, ஹீரோவாக நடித்த நல்லாண்டி குடும்பத்தார் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.


2022-ஆம் ஆண்டு எம். மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த கடைசி விவசாயி திரைப்படம் சிறந்த தமிழ் படமாக 69வது தேதிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தேர்வாகியுள்ளது. இந்த படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு, முனீஸ்வரன் என பலர் நடித்துள்ளனர். படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் தான் நல்லாண்டி. வயது முதிர்ந்த நல்லாண்டி விவசாயத்தை காக்க போராடும் கதையே கடைசி விவசாயி. 


நிஜ வாழ்க்கையிலும் நல்லாண்டி விவசாயி மட்டும் இல்லாமல் நல்ல மனிதராக வாழ்ந்தார் என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். சொந்த வாழ்க்கையிலும் கடினமாக உழைப்பை கொடுத்த நல்லாண்டி கடைசி வரை விவசாயியாகவே வாழ்ந்துள்ளார். அதனால்தான் படத்தில் நடிப்பை வெளிப்படுத்தாமல் ஒரு விவசாயியாகவே  வாழ்ந்து காட்டியுள்ளார். படம் முழுக்க வரும் நல்லாண்டியின் அப்பாவியான சாந்த குணம், விவசாயம் மட்டுமே தனக்கு தெரிந்த உலகம் என இருக்கும் அவரது எதார்த்தமான நடிப்பும் ஒவ்வொருவரின் மனதையும் உலுக்கி பார்த்தது. 


இதில் சோகம் என்னவென்றால், கொரோனாவுக்கு பிறகு தாமதமாக படம் வெளியானதால், தனது நடிப்பை திரையில் பார்க்காமலேயே நல்லாண்டி இறந்து விட்டார். இந்த நிலையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டதால், இறந்து இருந்தாலும் மீண்டும் அனைவராலும் நல்லாண்டி பேசப்பட்டு வருகிறார். இந்த நிலையில் நல்லாண்டி குடும்பத்தார் அவரை பற்றி நில மாதங்களுக்கு முன்பு பேசிய  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


ஊடகம் ஒன்றில் பேசிய நல்லாண்டியின் மகள், ”கடைசி விவசாயி படத்தில் இறந்த மாதிரி நடித்த அப்பா, படம் ரிலீசானதை பார்க்காமல் இறந்து விட்டார். படத்தில் இறந்த காட்சியில் எழுந்து வரும் எங்கள் அப்பா நிஜத்தில் எழுந்து வரவில்லை.


கடைசி விவசாயி படம் ரிலீசான ஒரு மாதத்துக்கு பிறகு இயக்குநர் மணிகண்டன் எங்களை பார்க்க வந்தார். எங்கள் அப்பா இறந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பார்க்க வந்தனர். அவரது மரணத்தின் போது கூட உடலை பார்க்க யாரும் வரவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் வந்த போது நாங்கள் எதுவும் பேசவில்லை. எங்களுக்கு  4 ஆண்டுகளாக எந்த பணமும் கொடுக்கவில்லை. எங்க அப்பா நடித்ததற்காக அவர் இறந்த பிறகு எங்கள் அம்மாவின் செலவுக்காக ரூ.1 லட்சம் மட்டும் பணம் தந்தார்கள். படம் என்றாக ஓடினால் மேலும் பணம் தருவதாக கூறினார். ஆனால், இதுவரை எதுவும் தரவில்லை.


ஒருநாள் இயக்குநர் மணிகண்டனின் மேனேஜர் ஒருவர் வந்தார். அவர்கள் எங்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறினார். வீடு கட்டித்தர வேண்டாம், அதற்கு ஆகும் செலவை பணமாக தாருங்கள் என கேட்டோம். அதன்பிறகு எந்த பதிலும் இல்லை. படம் ரிலீசானதும் மணிகண்டனுக்கு போன் செய்தேன். ஆனால், நாங்கள் யாரென்று தெரியவில்லை என இயக்குநர் மணிகண்டன் கூறிவிட்டார். 


எனக்கும் கணவர் இல்லை. எங்கள் அப்பாவையும் இழந்துட்டோம். தினமும் வயலுக்கு கூலி வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு சாப்பாடு. எங்கள் அப்பா நடித்த படம் இந்த அளவுக்கு வெற்றிபெற்றுள்ளது. ஆனால், நாங்கள் தினமும் சாப்பட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். படத்தில் நடிக்கும் போது எங்க அப்பாக்கு ஒரு நாளைக்கு ரூ.500 அல்லது ரூ.1000 சம்பளமாக கொடுத்துள்ளனர். வயதான எனது தாயை நான் கூலி வேலை செய்து பார்த்து வருகிறேன். படம் பெரிய அளவில் வெற்றிபெற்றதால் எங்கள் அப்பாவுக்கு தரக்கூடிய சம்பளத்தையாவது கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்” என கண்ணீருடன் கூறியுள்ளார்.