இந்தியாவில் தேசிய மகள்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற தந்தை - மகள் உறவு குறித்த பாடல்களை காணலாம். 


சின்ன கண்ணம்மா


1993 ஆம் ஆண்டு ரகு இயக்கத்தில்  கார்த்திக் , கௌதமி , சுஹாசினி , நாசர் , ஷாமிலி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் ‘சின்ன கண்ணம்மா’. இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் தன் மகள் ஷாம்லியை நினைத்து கார்த்திக் பாடுவதாக “எந்தன் வாழ்க்கையில் அர்த்தம் சொல்ல..பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே..என் மகளே” என தொடங்கும் பாடல் இடம் பெற்றது. இப்பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுத மனோ பாடியிருந்தார். 



பூவே பூச்சூடவா


1985 ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா படத்தில் பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் வைரமுத்து வரிகளில் பூவே பூச்சூடவா பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலில் ஜேசுதாஸ், சித்ரா ஆகியோரின் குரலில் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது. இது படத்தில் பாட்டி - பேத்தி உறவாக காட்டப்பட்டிருந்தாலும் மகளுக்கான அன்பு கொண்டு ”மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,நீ என் மகளாக வேண்டும்” போன்ற வரிகள் இடம் பெற்றது. 



கன்னத்தில் முத்தமிட்டால்


2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் ”கன்னத்தில் முத்தமிட்டால்”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் வைரமுத்து பாடல்களை எழுதினார். இதில் “கன்னத்தில் முத்தமிட்டால்” என்ற பாடல் முழுக்க முழுக்க இரண்டு வெர்ஷனில் (தந்தை, தாய்) மகளை பற்றி எழுதப்பட்டது. “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! வானம் முடியுமிடம் நீதானே..மார்பில் ஊறும் உயிரே” என உருக வைக்கும் வரிகளுக்கு தேசிய விருதும் கிடைத்தது. 



தெய்வதிருமகள் 


2011 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால், பேபி சாரா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் ‘தெய்வ திருமகள்’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வெளியான இப்படத்தில் “ஆராரிரோ” என தொடங்கும் பாடல் மனவளர்ச்சி குறைபாடு கொண்ட தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான உறவை பசைசாற்றியது. நா.முத்துக்குமார் எழுதிய வரிகளுக்கு உயிரூட்டியிருந்தார் ஹரிசரண். வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே…பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே… போன்ற வரிகள் எந்த வயது தந்தை - மகளுக்கும் பொருந்தக்கூடியது. 



தங்க மீன்கள் 


2013  ஆம் ஆண்டு ராம் இயக்கி நடித்த தங்க மீன்கள் படம் வெளியானது. இப்படத்தில் பேபி சாதனா மகளாக நடித்திருந்தார். யுவன் இசையமைத்த இந்த படத்திற்கு நா. முத்துக்குமார் பாடல்களை எழுதியிருந்தார். இதில் ‘ஆனந்த யாழை’ என தொடங்கும் பாடல் இன்றைக்கும் பல தந்தைக்கும் மகள்களின் அழைப்புக்கான ரிங்டோனாக உள்ளது. 



தெறி 


2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி படம் வெளியானது. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா உள்ளிட்ட பலரும் நடித்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த படத்தில் ”ஈனா மீனா டீக்கா” என்னும் பாடல் தந்தை, மகள் இடையேயான ஜாலியான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருந்தது. பாடல் வரிகளை பா.விஜய் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து எழுதியிருந்தனர். 



என்னை அறிந்தால்


2015 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அருண் விஜய், அனுஷ்கா, அனிகா சுரேந்திரன் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் ரிலீசானது. இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை எழுதிய “உனக்கென்ன வேணும் சொல்லு” பாடல் தந்தை - மகள் உலகின் மோஸ்ட் வாண்டட் பாடலாக உள்ளது. இப்பாடலை பென்னி தயாள், மஹதி பாடியிருந்தனர். 



அபியும் நானும் 


2008 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், த்ரிஷா அப்பா-  மகளாக நடித்திருந்த ‘அபியும் நானும்’ படம் வெளியாகியிருந்தது. வித்யாசாகர் இசையமைத்த இப்படத்தில் “வா வா என் தேவதையே” என்னும் பாடலை வைரமுத்து எழுத மதுபாலகிருஷ்ணன் பாடியிருந்தார். மகளின் வளர்ச்சியும், தந்தையும் அன்பும் ஒருசேர இப்பாடலில் இடம் பெற்றிருந்தது. 



கனா


2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படம் வெளியானது. இப்படத்தில் அவர் எழுதி தன் மகள் மற்றும் வைக்கம் விஜயலட்சுமியுடன் இணைந்து பாடிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. பெண் குழந்தைகளின்  மகளின் பார்வையில் இருந்து அப்பா உறவு என்கிற ரீதியில் எழுதப்பட்டிருக்கும். 



விஸ்வாசம் 


2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படம் வெளியானது. இப்படத்திலும் அவரது மகளாக அனிகா சுரேந்திரன் நடித்திருந்தார். இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய “கண்ணான கண்ணே” பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்காக இமான் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.