தேசிய விருதுகள் 2024


2022-ஆம் ஆண்டு வெளியான இந்தியப் படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் சிறந்த பின்னணி இசை , சிறந்த தமிழ் மொழி படம் , சிறந்த ஒளிப்பதிவு , சிறந்த ஒலியமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.


இதில் சிறந்த ஒலியமைப்பிற்கான தேசிய விருதை வென்ற ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். யார் இந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என்று பார்க்கலாம்..


ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி


மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி . இதனைத் தொடர்ந்து மே மாதம் , சதிலீலாவதி , ஆசை , தளபதி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார் . குறிப்பாக சதி லீலாவதி படத்தில் கமலின் மகனாக இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. 


சென்னை லயோலா கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்த ஆனந்த் பின் அண்ணா பல்கலைகழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மீடியாவில் முதுகலை பட்டம் பெற்றார். பாலு மகேந்திராவிடம் சில வருடங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்பு கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் வசனம் மற்றும் ஒலியமைப்பில் பணியாற்றினார்.


மன்மதன் அம்பு , விஸ்வரூபம் , ஓ காதல் கண்மணி , செக்கச் சிவந்த வானம் , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றியவர் தற்போது தக் லைஃப் படத்திலும் பணியாற்றி வருகிறார்.






பொன்னியின் செல்வன் படத்திற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி தேசிய விருது பெற்றுள்ள நிலையில் அப்படத்தின் சவுண்ட் டிசைனிங் பற்றி அவருடைய நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.