இது பழங்குடியினப் பெண்களுக்கான அங்கீகாரத்தின் காலம் எனலாம். ஒருபக்கம் 15-வது குடியரசுத் தலைவராக ஒடிசாவின் சந்தாலி என்னும் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே நேரம் மற்றொருபக்கம் கேரளாவின் அட்டப்பாடியின் ஒரு சிறிய மலைக்கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூகத்துப் பெண்ணான பாடகி நஞ்சம்மாவுக்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைக்கவிருக்கிறது. 


நாட்டின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் சிறந்த பாடகருக்கான விருதை நஞ்சம்மா பெறவிருக்கிறார்.  மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் உருவான அய்யப்பனும் கோஷியும் படத்தில் தனது உயிரோடு இழைந்த குரலில் நஞ்சம்மா பாடிய 'கலக்காத்தா சந்தன மெரா’ பாடலுக்காக அவருக்கு இந்த விருது தரப்பட இருக்கிறது. தமது இருளர் மொழியிலேயே நஞ்சம்மா அந்தப் பாடலை எழுதிப் பாடியிருந்தார்.




அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒரு காட்சி


’கிழக்காலே இருக்கும் காடுகளில் சந்தன மரம் பூத்திருக்கிறது வா நாம் பூப்பறித்தபடியே ஏரோப்ளேன் பார்க்கப் போவோம்’ என விரிகிறது அந்தப் பாடல். படத்தில் பாடிய போது தனக்கு அந்தப் படத்தில் நடித்த நடிகர் பிருத்விராஜ் யாரென்றே தெரியாது என அப்பாவியாக அவர் பேசிய வீடியோ பாடலைவிடப் படு வைரலானது.அந்தப் படத்திலேயே மொத்தம் மூன்று பாடல்களைப் பாடிய நஞ்சம்மா அட்டப்பாடியில் உள்ள நாக்குபத்தி என்கிற பகுதியைச் சேர்ந்தவர். அந்த பகுதியின் ஆசாத் கலா சமிதி என்கிற நடன இசைக்குழுவில் உறுப்பினராக இருக்கும் நஞ்சம்மா கேரளா மற்றும் பிற மாநிலங்களில் நடக்கும் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். அய்யப்பனும் கோஷியும் படம் அட்டப்பாடியில் உருவாக்கப்பட்டது என்பதால் அந்தப் படத்தின் இயக்குநர் அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரையேனும் பாடவைக்க முடிவு செய்தார். அப்படித்தான் நஞ்சம்மாவின் குரலில் அவர் பாடக் கேட்கவும் அந்த படத்துக்காக ஓகே செய்யப்பட்டார். பாடல் பதிவு சென்னையில்தான் நடந்தது என்பது இதில் கூடுதல் சுவாரசியத் தகவல். 



சிறுவயதிலிருந்தே பாடிவரும் நஞ்சம்மா பள்ளிக்குச் செல்லாதவர் மாடு மேய்த்துதான் வருமானம் ஈட்டுக்கிறார்.ஏற்கெனவே கேரள அரசின் விருதை வென்ற ‘வெளுதே ராத்திரிகள்’ என்கிற பாடலையும் அவர் பாடியுள்ளார். தற்போது தேசிய விருதை வென்ற நஞ்சம்மாவின் பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்ட விதமே சுவாரசியமானது. காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு பாடுவது கடினமாக இருக்கிறது ரிதம் வரவில்லை என்பதால் தனக்கு ஏற்றதுபோல ரிக்கார்ட்டிங் அறையில் அவர் பாடியிருக்கிறார். பிறகு படத்துக்கு ஏற்ப அந்தப் பாடலின் டெம்போ அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை படத்தின் இசையமைப்பாளர் ஜேக் பகிர்ந்துகொண்டார். அத்தகைய குரலை அங்கிகரிப்பது தேசிய விருதுக்கு கிடைத்த பெருமை என்றால் அது மிகையில்லை.