தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நட்சத்திரம் நகர்கிறது படம் புறக்கணிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பா.ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அவர் படங்களில் பேசப்பட்ட அரசியல் களமும், அவரது பார்வையில் காட்டப்பட்ட சமூக கட்டமைப்பும் தவிர்க்க முடியாத இயக்குநர் பட்டியலில் அவரை இணைத்தது. இதனிடையே அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், டான்சிங் ரோஸ் ஷபீர், கலையரசன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் படம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் முழுவதும் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாய திருமணம், திருநங்கை, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கிடையேயான காதல் உள்ளிட்ட விஷயங்களை பேசப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் தைரியமான முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.
இதனிடையே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கோப்ரா படத்துடன் நட்சத்திரம் நகர்கிறது படமும் வெளியானது. ஆனால் சில திரையரங்குகளில் கோப்ரா படத்திற்கு மட்டும் முன்னுரிமை அளித்து விட்டு இந்த படத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் குமுறல்களை தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை விஆர் மாலில் உள்ள பிவிஆர் தியேட்டரில் 2 மணி நேரம் காக்க வைத்து விட்டு காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும், பாடியில் உள்ள ஒரு தியேட்டர், கும்பகோணத்தில் உள்ள தியேட்டரில் 2 ஆம் பாதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக ஒளிபரப்பப்பட்டதாகவும் பதிவுகளை சமூக வலைத்தளத்தில் காண முடிகிறது.
ஆனால் உண்மையிலேயே நட்சத்திரம் நகர்கிறது படம் புறக்கணிக்கப்படுவதாக சினிமா வட்டாரத்தில் இருந்து எந்த தகவல் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.