நடிகர் விக்ரமின்  'கோப்ரா' படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படக்குழு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.  


அந்த முடிவின் படி படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “ எந்த ஒரு படமாக இருந்தாலும் அது ரசிகர்களை உற்சாகப்படுத்தி,  மகிழ்வித்து நல்லதொரு சினிமா அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உங்களது நேரம் மற்றும் பணத்திற்கான சரியான படத்தை (கோப்ரா) கொடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. 









நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ரசிகர்கள், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில்,கோப்ரா படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வெர்ஷன் இன்று மாலை முதல் தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் அமலுக்கு வருகிறது. உங்களை ஆதரவை தாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.       


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் 9 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.


இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.  2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 


                                                 


இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. காலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டதால் ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டருக்கு வர தொடங்கினர். கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்குப் பின் விக்ரம் படம் தியேட்டரில் வெளியாகியிருந்தது. இதனால் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க சென்னை ரோகிணி தியேட்டருக்கு விக்ரம் தனது மகன் துருவ் உடன் ஆட்டோவில் வந்திறங்கினார். படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், படம் 3 மணி நேரம் ஓடுவதையும் ஒரு குறையாக குறிப்பிட்டு விமர்சனத்தை முன் வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.