தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி, கோம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் ஏற்காடு மலைப் பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த தொடர் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

 



 

மேலும், ஏற்காடு மலையில் இருந்து வருகின்ற வெள்ளம் மஞ்சவாடி பகுதியில் சிற்றாறாக உருவெடுத்து பீனியாற்றில் கலக்கிறது. இதில் மஞ்சவாடி அருகே ஆறு அடி உயர்மட்ட பாலத்தின் மேல் சுமார் மூன்று அடி அளவிற்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அரூர்-சேலம் பிரதான சாலையில் செல்கின்ற வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றது. மேலும் இரு சக்கர வாகனங்கள், ஒரு சில சிறிய ரக கார்கள் இந்த வெள்ளத்தில் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றது.  சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த கனமழையால், சேலம் பிரதான சாலையில் மரம் சாய்ந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி பகுதி முழுவதும் விவசாய நிலங்கள், கால்வாய்கள், ஏரிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 



 

 

17 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய தும்பல அள்ளி அணை-அணையின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இன்று உபரிநீரை திறந்து வைத்தார்.

 



 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் பாசன வசதி செய்யும் பொருட்டு பெண்ணையாற்றின் கிளை நதியான பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே நரியன அள்ளி கிராமத்தில்ன தருமபுரி -  கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தும்பல அள்ளியில் நீர்த்தேக்க அணையானது அமைந்துள்ளது.  இது தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் நீர்வரத்து பெறுகிறது. இந்நிலையில் தற்பொழுது நல்ல மழை பெய்துவருவதால் சின்னாறு அணை தற்பொழுது முழு கொள்ளளவை எட்டி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி வருவம் உபரி நீர் இந்த தும்பல அள்ளி நீர்த்தேக்க அணைக்கு வந்து கொண்டிருக்கின்றது.
  

 



 

 

சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து கிடைக்கப்பெற்று இந்த நீர்த்தேக்க அணையின் 14.76 அடி உயரத்தில் சுமார் 12.14 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும் இந்த நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 256.00 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி இன்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உபரி நீர் திறந்து விட்டார். எனவே, பொதுமக்கள் பூலாப்பாடி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஆற்றில் மீன்பிடிப்பதற்கோ செல்ல வேண்டாம் எனவும், பூலாப்பாடி ஆற்றின் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு வந்து பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.