லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மலையாளத்தின் உச்ச நடிகரான மம்மூட்டி நடிப்பில் சென்ற மாதம் திரையரங்குகளில் வெளியான ’நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
நண்பகல் நேரத்து மயக்கம்:
மலையாளத்தில் மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்பட்டு வருபவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. அங்கமலி டைரிஸ், ஈமாயு, ஜல்லிக்கட்டு ஆகிய ப்டங்களின் மூலம் மலையாளம் தாண்டி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மம்மூட்டியுடன் இணைந்துள்ள படம் ’நண்பகல் நேரத்து மயக்கம்’.
மலையாளம் - தமிழ் என இரு மொழிகளிலும் ஒருசேர உருவான இந்தப் படம் மலையாளத்தில் ஜனவரி 19ஆம் தேதியும், தமிழில் ஜனவரி 27ஆம் தேதியும் வெளியானது. மம்மூட்டியுடன் நடிகர் பூ ராம், ரம்யா பாண்டியன், உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், மம்மூட்டியின் மாறுபட்ட நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது.
பாசிட்டிவ் விமர்சனங்கள்:
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு வரும் டூரிஸ்ட் கும்பல், திரும்பிச் செல்லும் வழியில் தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக மாட்டிக் கொள்வதுடன், அதற்கு காரணமான மம்முட்டிக்கு என்ன நேர்ந்தது என்பதையும் காமெடி ஜானரில் கலந்துகொடுத்து இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது.
குறிப்பாக தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள இப்படம் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.
தமிழ், மலையாளம் என இருமொழிப் படமாக உருவான இப்படம், நெட்ஃப்ளிக்ஸில் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இருக்கும் இடத்தை இல்லாத இடம் தேடி, மயக்கமா கலக்கமா, வீடு வரை உறவு உள்ளிட்ட பல தமிழ் சினிமா பாடல்கள், சிவாஜி கணேசன் நடித்த கௌரவம் பட வசனங்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாஸ்டால்ஜியாவை உண்டுபண்ணும் இப்படத்தின் பல காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தமிழ், மலையாளம் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
இந்த மாதம் மம்மூட்டி நடித்த க்ரிஸ்டோஃபர் படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மம்மூட்டி நடிப்பில் காதல் த கோர் படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.