மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்'. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
நண்பகல் நேரத்து மயக்கம்:
மலையாள திரையுலகின் ஜாம்பவான் மம்மூட்டி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் ரோர்சாக். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி நடித்துள்ள திரைப்படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்'.
அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற பல அற்புதமான திரைப்படங்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனரான லியோ ஜோஸ் பல்லிசேரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் முதல் முறையாக மம்மூட்டி - லியோ ஜோஸ் ஜோடி இணைந்துள்ளது. தமிழகத்தோடு தொடர்புடைய திரைப்படம் என்பதால் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக தேனீ ஈஸ்வர் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தமிழ்நாட்டை சுற்றியே நடைபெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிராமத்து லுக்கில் சம்பவம் :
வழக்கமாக மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் மம்மூட்டி 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தின் டிரைலரில் அழுக்கு லுங்கியில் கிராமத்து லுக்கில் காணப்பட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் பொங்கல் முடிந்ததும் ஜனவரி 19ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
வெரைட்டி படங்கள் :
மம்மூட்டி தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டக்கூடியவர். அந்த வகையில் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பீஸ்மா பர்வம், புழு, ரோர்சாக் ஆகிய மூன்று திரைப்படங்களும் முற்றிலும் வேறுபட்ட ஜானர்களாக இருந்ததால் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணி என்பதால் கவனத்தை ஈர்த்துள்ளது.