மதுரையில் வருகிற 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க கோரி அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்கால்பாசன விவசாயிகள் சங்கத்தினர் என இரு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இரு தரப்பும் இணைந்து நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மற்றும் கோட்டச்சியர் தலைமையில் நடைபெற்ற 3கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு 4ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம கமிட்டியினர் போட்டியை நடத்த விடாமல் தி.மு.க., அமைச்சர் மூர்த்தி தடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இன்று வட்டாச்சியர் மூலம் போட்டி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக வந்த தகவலையடுத்து அவனியாபுரம் பகுதியில் காவல்துறையினர் குவித்துவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க கோரி தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்துவந்தும், கைகளில் நெல் நாற்றுகளை ஏந்தியபடியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க கோரியும், அமைச்சரை கண்டித்தும் உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியை சேர்ந்த அன்பரசு, சுரேஷ், செல்வக்குமார், பிச்சைராஜன் உள்ளிட்டோர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை கடந்த 3 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி மாவட்ட நிர்வாகம் நடத்திய நிலையில் இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் தென்கால்பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம கமிட்டியினரிடையே மல்லுக்கட்டு நடைபெறுவதால் போட்டியை யார் நடத்துவது என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இரு தரப்பு பிரச்னை தொடர்வதால் மாவட்ட நிர்வாகமே நடத்தவேண்டும் எனவும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அடுத்தடுத்து இரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதால் ஆட்சியர் அலுவலகம் போராட்டகளமாக மாறியுள்ளது.