தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அகண்டா 2’ படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். இந்த படத்தில் நடிகர்கள் ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, சம்யுக்தா, ஜெகபதி பாபு, கபீர் சிங் துஹான், ரான்சன் வின்சென்ட் என பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்த படத்தில் தமன் இசையமைத்துள்ளார். இது 2023ம் ஆண்டு வெளியான அகண்டா படத்தின் தொடர்ச்சியாகும். 

Continues below advertisement

படத்தின் கதை

இந்திய-சீன எல்லையில் (கல்வான்) இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் கொல்லப்பட்ட வீரர்களில் ஒரு சீன இராணுவ தளபதி மகன் (சங்கே செல்ட்ராம்) இறக்கிறார். இதனால் கோபமடையும் ராணுவ தளபதி இந்தியாவை அழிக்க சபதம் செய்கிறார். அவர் இந்திய பிரதமர் பதவியில் கண் வைத்திருக்கும் அரசியல்வாதியான அஜித் தாக்கூருடன் (கபீர் சிங் துஹான்) கைகோர்க்கிறார். அவர்களின் திட்டப்படி,  மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் ஒரு ஆபத்தான வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். கடவுள் மீதான நம்பிக்கையை மக்களை இழக்கச் செய்ய ஒரு திட்டம் தீட்டப்படுகிறது.

இந்த வைரஸுக்கான தடுப்பூசியை மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அகண்டாவின் (பாலகிருஷ்ணா) சகோதரரான முரளி கிருஷ்ணா ( மற்றொரு பாலகிருஷ்ணா) மகள் ஜனனி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) உருவாக்குகிறார். இப்படியான நிலையில் அகண்டா வைரஸின் பிடியிலிருந்து நாட்டை எப்படிக் காப்பாற்றினார்? மக்களிடையே கடவுள் நம்பிக்கையை அவர் எவ்வாறு மீட்டெடுத்தார்?  அகண்டா நாட்டிற்காகவும் தர்மத்திற்காகவும் என்ன மாதிரியான போரில் ஈடுபட்டார்? என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

Continues below advertisement

தியேட்டரில் படம் பார்க்கலாமா?

'அகண்டா' முதல் பாகத்தில் , பாலகிருஷ்ணா அகோரி  வேடத்தில் முரட்டுத்தனமான தோற்றத்தில் மட்டுமே நடித்தார்.ஆனால்  'அகண்டா 2' படத்தில், இயக்குநர் போயபதி ஸ்ரீனு அந்த கேரக்டரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் என சொல்லலாம். அவருக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாகக் காட்டினார். இவை திரையில் அழகாக பிரதிபலித்துள்ளது. அசாதாரணமாக பாலகிருஷ்ணா செய்யும் சண்டைக் காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. தமனின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

அதேசமயம் படத்தில் சென்டிமென்ட் காட்சிகளும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் அகண்டா கேரக்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கேரக்டரான முரளி கிருஷ்ணாவுக்கு கொடுக்கப்படவில்லை. சனாதன தர்மம், உயிரியல் போர் (வைரஸ் தாக்குதல், மகா கும்பமேளா, தீய சக்திகள், அரசியல் என அனைத்தையும் தொட்டுள்ளார்கள். ஆனால் எதையும் முழுதாக முடிக்கவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் கமர்ஷியலாக ஒரு படத்தை வெற்றிக்கரமாக வழங்கியுள்ளார். 

உண்மையில் அகண்டா கேரக்டரில் பாலகிருஷ்ணாவைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நிறைய கேரக்டர்கள் இருந்தாலும் கொடுத்ததை சிறப்பாக அனைவரும் செய்துள்ளனர். படத்தில் கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு திருப்தியாக அமையும். கண்டிப்பாக ஆக்‌ஷன் படம் விரும்புபவர்களுக்கு அகண்டா ஒரு அசன விருந்து தான்!