மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளின் குறைபாடுகளைக் களையக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ இணை இயக்குநரைக் கண்டித்து கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஒருங்கிணைப்பில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, மருத்துவமனையின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி முழக்கங்களை எழுப்பினர்.

Continues below advertisement

தரம் உயர்த்தப்பட்டும் குறையாத குறைபாடுகள்

மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், 3,000-க்கும் அதிகமானோர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. (MRI) மற்றும் சி.டி. (CT) ஸ்கேன் வசதிகள் இருந்தும், அவற்றை இயக்குவதற்கும், முடிவுகளை ஆராய்வதற்கும் ரேடியாலஜி மருத்துவர் நியமிக்கப்படாததால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதால், மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கான நோக்கம் நிறைவேறவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டோர் வேதனை தெரிவித்தனர்.

அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, தேமுதிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மையம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி எதிர்ப்பு இயக்கம், மயிலாடுதுறை இந்திய தேசிய லீக், பெரியார் திராவிடர் கழகம், மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Continues below advertisement

மருத்துவமனை குறித்த முக்கிய கோரிக்கைகள்

போராட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்களும், இயக்கப் பொறுப்பாளர்களும் கண்டன உரையாற்றினர். அப்போது, அவர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:

  • எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் வசதிக்கான நிரந்தர ரேடியாலஜி மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
  • மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறையைப் போக்கி, போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
  • ஓர் ஆண்டுக்கும் மேலாக விடுப்பில் உள்ள மருத்துவர்கள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உயிர்காக்கும் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்களை நியமித்து, நோயாளிகளை மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்காமல், மாவட்ட அரசு மருத்துவமனையிலேயே உயர் சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக சுகாதாரத் துறை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேட்டைக் களைய வேண்டும் என்றும், மருத்துவ இணை இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இவ்வளவு குறைபாடுகளுடன் செயல்படும் சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.