அறிவியல் புனைவுக் காவியத் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள `ட்யூன்’ திரைப்படம் 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் தொழில்நுட்பப் பிரிவுக்கான பெரும்பாலான விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 6 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற `ட்யூன்’ திரைப்படத்திற்குச் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவிலும் விருது வழங்கப்பட்டுள்ளது. `ட்யூன்’ திரைப்படத்திற்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியரான நமித் மல்ஹோத்ரா தற்போது ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார். 


உலகின் முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுள் ஒன்றான DNEG நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நமித் மல்ஹோத்ரா. இந்த நிறுவனம் ஏற்கனவே எக்ஸ் மெஷினா, இண்டர்ஸ்டெல்லார், ஃபர்ஸ்ட் மேன், பிளேர் ரன்னர் 2049, டெனட் முதலான திரைப்படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளது. 







நமித் மல்ஹோத்ரா


பால் லேம்பெர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், ப்ரையன் கான்னர், கெர்ட் நெஃப்சர் முதலானோரின் குழுவினருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த DNEG நிறுவனத்தைக் கடந்த 2014ஆம் ஆண்டு நமித் மல்ஹோத்ரா வாங்கியுள்ளார். பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருக்கும் நரேஷ் மல்ஹோத்ராவின் மகன் இவர். மேலும் இவரது தாத்தா எம்.என்.மல்ஹோத்ரா பாலிவுட் திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 



`ட்யூன்'


`ட்யூன்’ திரைப்படத்திற்கு சிறந்த விஷுவம் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டவுடன் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நமித் மல்ஹோத்ராவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், `இந்தியா தற்போது அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் ஆகிய துறைகளில் முன்னேறி வருகிறது.. உலகளவிலான இந்தத் தேவையை நமது திறமையால் பூர்த்தி செய்வோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.