கஸ்டடி படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மறுநாள் (ஏப்.23) வெளியாக உள்ளதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.


மாநாடு படத்துக்குப் பிறகு கஸ்டடி


நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மன்மத லீலை படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்ததாக தெலுங்கில் நாகசைதன்யாவுடன் கூட்டணி வைத்துள்ள படம் கஸ்டடி.


காவல்துறையைச் சேர்ந்தவராக நாக சைதன்யா இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் சேஸிங் மற்றும் ஆக்‌ஷன் கலந்த விறுவிறுப்பான  இந்தப் படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. வில்லனாக அரவிந்த் சாமி படத்தில் நடித்துள்ள நிலையில், க்ரித்தி ஷெட்டி, சரத் குமார், பிரியாமணி,  ரவி பிரகாஷ் எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இளையராஜா - யுவன் இசை


மாமனிதன் படத்துக்குப் பிறகு இளையராஜா யுவன் ஷங்கர் ராஜா இருவரும் மீண்டும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். 


வரும் மே 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் கஸ்டடி திரைப்படம் வெளியாக உள்ளது. ‘எ வெங்கட் பிரபு ஹண்ட்’ என டீசரில் குறிப்பிடப்பட்டு இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.


மேலும்  இந்தப் படத்தின் முதல் பாடலான 'ஹெட் அப் ஹை' எனும் பாடல் கடந்த  ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாடலான 'டைம்லஸ் லவ்' நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


இரண்டாவது சிங்கிள்


முதல் பாடல் ஓப்பனிங் பாடல் போல் அமைந்து கவனமீர்த்த நிலையில், இரண்டாம் பாடல் காதல் பாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், நாகசைதன்யா, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ளனர்.


மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதே நேரம் சமந்தா உடனான பிரிவுக்குப் பிறகு நாக சைதன்யா நடிப்பில் அண்மையில் இறுதியாக வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. 


தொடர்ந்து அவர் நடித்த பங்கராஜு திரைப்படமும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், வெங்கட் பிரபு - நாக சைதன்யா இருவருக்கும் கஸ்டடி படம் வெற்றியைத் தரும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.


மேலும் படிக்க: Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?