தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனாகிய நாகசைதன்யாவிற்கு இன்று 35வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, அவருக்கு அவரது ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாக சைதன்யா திரைப்பிரபல பின்னணியில் இருந்து திரையுலகிற்கு அறிமுகமானாலும், அவரது கடின உழைப்பால் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை அவர் உருவாக்கியுள்ளார்.  


நாகசைதன்யாவைப் பற்றி பலரும் அறியாத தகவல்களை கீழே காணலாம். நாகர்ஜூனாவிற்கு நாகசைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் நாகார்ஜூனாவும், நாகசைதன்யாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்போல எப்போதும் இருப்பார்களாம். நாகர்ஜூனாவும் அகிலைக் காட்டிலும் நாகசைதன்யாவுடன்தான் நெருக்கமாக இருப்பாராம்.




நாக சைதன்யாவும், பாகுபலி படத்தின் வில்லனான ராணா டகுபதியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நாகசைதன்யாவிற்கு படப்பிடிப்பிற்கு எப்போதும் முன்னதாகவே வரும் பழக்கம் உள்ளது. இதனால், அவருடன் பணிபுரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மிகவும் ஆர்வத்துடனே காணப்படுவார்கள். தெலுங்கு நடிகர் ராணாவும், நாகசைதன்யாவும் நெருங்கிய உறவினர்கள்.


நாகர்ஜூனாவிற்கும், அவரது முதல் மனைவியான லட்சுமி டகுபதிக்கும் பிறந்தவர்தான் நாகசைதன்யா. 1992ம் ஆண்டு நாகர்ஜூனா லட்சுமியை விவகாரத்து செய்த பிறகு, இரண்டாவதாக அமலாவை திருமணம் செய்துகொண்டார். நாகர்ஜூனா- அமலாவிற்கு பிறந்தவர்தான் அகில் அக்கினேனி.




நாகசைதன்யாவின் தாயான லட்சுமி டகுபதி, தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ராமநாயுடுவின் மகளும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான வெங்கடேஷின் சகோதரியும் ஆவார். வெங்கடேஷ் டகுபாட்டியின் நெருங்கிய உறவினர் ராணாடகுபாட்டி. முதல் மனைவியுடனான விவகாரத்திற்கு பிறகு, நாகர்ஜூனா தனது திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தையும், வெற்றியையும் தந்த சிவா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த அமலாவை திருமணம் செய்துகொண்டார்.


நாகசைதன்யா மிகவும் பாரம்பரியமான திரைப்பின்னணியைக் கொண்டவர். இவரது தாத்தா நாகேஸ்வரராவ் ஆந்திராவிலும், தெலுங்கு திரையுலகிலும் மிகவும் புகழ்பெற்றவர். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி போன்று, ஆந்திராவில் என்.டி.ஆர். - நாகேஸ்வரராவ் என்று தெலுங்கு ரசிகர்களால் போற்றப்பட்டவர். நாகர்ஜூனா, நாகசைதன்யா, நாகேஸ்வரராவ், அகில் அக்கினேனி என்று குடும்பமாக சேர்ந்து அவர்கள் நடித்த மனம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. குடும்ப பின்னணியில் உருவான இந்த படத்தில் சமந்தா, ஸ்ரேயா நாயகிககளாக நடித்திருந்தனர். 




இந்த படத்தை தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகுமாரை வைத்து உருவாக்க மனம் திரைப்படத்தின் இயக்குனர் விக்ரம் திட்டமிட்டார். ஆனால், அதற்கு பதிலாக 24 படம் உருவாக்கப்பட்டது. ஹிந்தியில் லால்சிங் சத்தா என்ற படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் நாகசைதன்யா நடித்துள்ளார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண