சமூக வலைதளங்களின் வளர்ச்சியும், இணையவசதியும் கடந்த தலைமுறையை விட இந்த தலைமுறையை அதி புத்திசாலிகளாக மாற்றியுள்ளது என்றே சொல்லலாம். வயது வித்தியாசமின்றி திறமைகளை வெளிப்படுத்தவும் இவை உதவுகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக சிறு குழந்தைகள் சமூக வலைதளங்களில் செய்யும் அலப்பறைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களால் மிக நீண்ட காலமாக இதில் சோபிக்க முடிகிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.


ஆனால் இங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 6  வயது சிறுவன் ஒருவர் துபாயில் நடைபெறும் பேஷன் ஷோவில் பங்கு பெற உள்ளார். கோவை மாவட்டம், ராம் நகரைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார்- கோமதி. இவர்களுக்கு ராணா என்ற 6 வயது மகன் உள்ளார்.


சிறுவனின் தந்தை ஜவுளிக்கடை நடத்தி வரும் நிலையில், தாயார் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். அப்படி ஒரு முறை கோமதியின் அழகு நிலையத்திற்கு வந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் ராணாவை பார்த்துள்ளார். இதனையடுத்து ஏன் ராணாவை பேஷன் ஷோக்களில்  பங்கு பெற வைக்கக்கூடாது என கேட்டுள்ளார். இந்த யோசனை ராணாவின் பெற்றோருக்கு பிடித்து விட, கோவையில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் ராணாவை பங்கு பெற வைத்துள்ளனர்.






பங்கு பெற்ற முதல் ஷோவிலேயே முதல் பரிசை வென்றான் ராணா. இதனையடுத்து சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற பேஷன் ஷோக்களிலெல்லாம் ராணாவை அவரது பெற்றோர் பங்கு பெற செய்தனர். பங்கு பெற்ற  போட்டிகளில் அனைத்தும் ராணா பரிசுகளை குவித்துள்ளான்.


இதுவரை 13 பதக்கங்களை வென்றுள்ள ராணா இன்று துபாயில் நடைபெற உள்ள சர்வதேச பேஷன் ஷோவில் பங்கு பெற உள்ளார். நான்கு நாட்கள் நடைபெறக்கூடிய இந்தப் போட்டியில் 15 உலக நாடுகளைச் சேர்ந்த மாடல்கள் பங்கு பெறுகின்றனர். வரும் காலத்தில் ஒரு கப்பற்ப் படை அதிகாரியாக மாறுவதே தனது லட்சியம் என்கிறார் ராணா..