எந்த படம் வந்தாலும் அதோடு சில ஒப்பீடு வரும். ஒன்று, அது ஏதாவது ஒரு படத்தை பார்த்து ‛காஃபி’ அடித்தது என்பார்கள். இல்லையென்றால், அது, ஏதோ ஒரு காட்சியின் தழுவல் என்பார்கள். இதெல்லாம் காலம் காலமாய் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான ஒப்பீடு தான். அந்த வகையில் ,இன்று பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் தனுஷ் நடித்த ‛நானே வருவேன்’ எது மாதரி படம் என்கிற எதிர்பார்ப்பு பலரிடத்தில் இருக்கிறது. 






உண்மையில் இது செல்வராகவன் படம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், கோப்ரா படத்தோடு சில ஒற்றுமை இருப்பதை கொஞ்சம் உணர முடிகிறது. சமீபத்தில் தான் கோப்ரா படம் வெளியானது என்பதால், இந்த ஒற்றுமையை தவிர்க்க முடியவில்லை. நம்மை அறியாமலேயே அது நம்மிடம் வந்து விடுகிறது. அப்படி என்ன ஒற்றுமை?


1.இரட்டையர் ஒற்றுமை!


கோப்ரா படத்தில் இரட்டையர் கதை தான். அதே இரட்டையர் கதை தான் நானே வருவேன். சிறு வயதிலிருந்தே தொடங்கும் இரட்டையர் கதை; நானே வருவேனும் சிறுவயதிலிருந்தே தொடங்கும் இரட்டையர் கதை. பெரியவர்களாக ஆகியும் கோப்ராவில் இரட்டையர் தொடர்வார்கள்; நானே வருவேனும் அப்படி தான். அந்த வகையில், இரட்டையர் ஒற்றுமை என்பது நானே வருவேன்-கோப்ராவின் முதல் ஒற்றுமை!


2.பெயர் ஒற்றுமை!


இது மிக மிக முக்கியமான ஒற்றுமை. கோப்ராவில் இரட்டை விக்ரமில் ஒருவர் பெயர் கதிர் மற்றொருவர் பெயர் மதி. நானே வருவேன் படத்தில் ஒரு தனுஷின் பெயர் அதே கதிர்; மற்றொரு தனுஷ் பெயர் பிரபு. நல்லவேளை அந்த பெயரும் மதி என வந்திருந்தால் இரண்டும் ஒரே கதாபாத்திர பெயராக இருந்திருக்கும். அந்த வகையில் இரு கதிர்களும் கோப்ரா-நானே வருவேன் படத்தில் இருப்பதால் பெயர் ஒற்றுமை என்பதும் இயல்பாகவே வந்துவிட்டது. 


3.மனநிலை ஒற்றுமை!


கோப்ரா படத்தில், கதிர் என்கிற விக்ரம் கதாபாத்திரம் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாகவே காட்டப்படும். அதே போல தான், நானே வருவேன் படத்திலும் கதிர் கதாபாத்திரத்தில் வரும் தனுஷூம் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சைக்கோ கதாபாத்திரமாகவே காட்டப்படுகிறார். எப்படி கோப்ரா கதிர், கொலைவெறியாக தாக்குவாரோ, அதே போல தான் நானே வருவேன் கதிரும் கொலைவெறி தாக்குதல் நடத்துகிறார். 


4.தம்பிகள் ஒற்றுமை!


கோப்ராவில் வரும் மதி என்கிற தம்பி பாத்திரமும், நானே வருவேன் படத்தில் வரும் பிரபு தம்பி பாத்திரமும் ஒரே மாதிரியானவை. அமைதியானவை. அதிரடி இல்லாதவை. குடும்ப நெருக்கமானவை. அந்த இரு கதாபாத்திரங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் நான்காவது பொருத்தம், கச்சிதமாக பொருந்துகிறது. 


5.இறப்பு ஒற்றுமை!


கோப்ராவில் அண்ணன் கதாபாத்திரமான கதிர் கதாபாத்திரம் கதையில் இறந்துவிடும். அதே போல தான், நானே வருவேன் படத்திலும் கதிர் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் இறந்துவிடுகிறது. இது மிக மிக பொருத்தமான பொருத்தம். அண்ணன்கள் இறக்கும் போது, தம்பி கதாபாத்திரங்கள் இரண்டுமே அருகில் நிற்பது அதை விட கச்சிதமான பொருத்தம். 






நல்லவேளை இத்தனை பொருத்தம் இருந்தாலும், கதை பொருத்தம் இல்லாததால், இரண்டு வெவ்வேறு ஆனது. இல்லைனெ்றால் 6வது பொருத்தம் சேர்ந்திருக்கும். அதோடு இன்னொரு பொருத்தமமும் இல்லாமல் போனது; அது நேரப் பொருத்தம். கோப்ரா படம் 3 மணி நேரத்தை கடந்த திரைப்படம்; நானே வருவேன் 2 மணி நேரம் மட்டுமே ஓடும் திரைப்படம். இந்த பொருத்தம் இல்லாதததும், நானே வருவேனுக்கு ப்ளஸ் பாய்ண்ட்.