இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் செப்டம்பர் 29ஆம் நாள் வெளியாக இருக்கும் திரைப்படம் நானே வருவேன். வி கிரேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்‌. யுவன் சங்கர் ராஜா இசையில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.






இந்த திரைப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 15 ஆம் நாள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் தெலுங்கு தியேட்டர் வெளியீட்டு உரிமையை பிரபல கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் அல்லு அர்ஜுனின் தயாரிப்பு நிறுவனமாகும்‌. ஆந்திர பிரதேசம் முழுவதும் தியேட்டரில் வெளியாகும் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் நானே வருவேன் திரைப்படத்திற்கு வாங்கியுள்ளது.






தெலுங்கில் நேனே வஸ்துனா என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நானே வருவேன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வீராசூரா சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் யூடியூபில் ட்ரெண்டிங் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.






தனுஷ் மற்றும் செல்வராகவன் காம்போவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு போட்டியாக வெளியாகிறது‌. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி த்ரிஷா ஐஸ்வர்யா ராய் என உச்ச நட்சத்திங்கள் பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் நாள் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 29 ஆம் நாள் நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.