பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்

Continues below advertisement

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும்  பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுக்கு நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனால் அவர் பழையபடி நடிப்பதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது குறித்து தனியார் சேனலுக்கு நடிகர் வடிவேலு அளித்த பேட்டியில், “நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன். இரண்டு படங்கள் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என்று கூறினார்.

லைகா தயாரிப்பில் நாய் சேகர் திரைப்படம் தயாராக இருந்த நிலையில், அந்த தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து ஒரு படம் எடுத்து வந்தது. நாய் ஒன்றும் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இதற்கிடையில் சம்மந்தப்பட்ட அந்த தலைப்பை பெற வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் அதே போல தயாரிப்பாளர் லைக்கா ஆகியோரும் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். 

எப்படியும் அந்த தலைப்பை பெற்றுவிடுவோம்... அந்த தலைப்பை வைத்திருப்பவர் வடிவேலுவின் நெருங்கிய நண்பர் என்பதால் எப்படியும் அந்த தலைப்பை பெற்று விடும்வோம் என இயக்குனர் சுராஜ் தெரிவித்திருந்தார். அதன்படி இப்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற பெயரில் படத்தலைப்பு வெளியாகியுள்ளது