இசை ரசிக்கும் யாரும், கவிதை ரசிக்கும் யாரும் நாமுத்துக்குமாரை நினைக்காமல் இருக்க முடியாது. இலையை அசைக்கும் காற்றுதால் ஒலியைக் கடத்துக்கிறது என்கிறது அறிவியல். அந்தக்காற்று அசையும் வரை ஒலி பரவும் வரை இசையும் நம்மிடம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. நிச்சயம் அதில் நாமு இருக்கிறார். தூர தேசத்தில் அரைகுறையாய் ஒலிக்கும் ஏதோ ஒரு பாடல் நாமுவுக்கு உரியதாய் இருக்கும், யாரோ ஒருவரின் காலர் ட்யூன், பொது இடத்தில் அழைப்புக்காக ஒலிக்கும் அறிமுகமில்லாத ஒருவரின் ரிங்டோன், மழைக்கால மாலையில் எம்.எப்.ரேடியோ, சோஷியல் மீடியாவில் ஏதோ ஒரு வீடியோ எடிட் என கேட்கும் இடமெல்லாம் நாமு நின்று புன்னகைக்கிறார். ஜூலை 12 நாமுவின் பிறந்தநாள்.
நாமுத்துக்குமார் குறித்து சொன்ன பாலுமகேந்திரா, ‘சுவாசம்போல் கவிதை வருகிறது இவனிடம்’என்றார். ஆமாம், உண்மைதான் என்பதுபோல அழகான கவிதை வரிகளை எல்லாம் பாடல்களில் கொடுத்து ரசிக்க வைத்தவர் நாமு.
''அடடா
தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே''
''வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே''
''அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி''
''பறவை பறந்தப் பிறகும் கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே''
''தொடு வானம்
போலவே கதை பேசிக்
கொண்டே வா காற்றோடு
போவோம் உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும் ''
இப்படியாக பாட்டுக்குபாட்டு வரிகளை கோடிட்டுக்காட்ட முடியும். ‘வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்’ என வெயிலை தொடர்ந்து ரசித்து ஆமோதித்த ஒரு கவிஞன். ’மழை மட்டுமா அழகு.. சுடும் வெயில்கூடத்தான் அழகு’ என அழுத்திச் சொன்ன பாடலாசிரியர். ’ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ என தந்தைக்குள் இருக்கும் தாயை கண்முன்னே கொண்டு வந்தவர்.
காதல் களிப்பு, காதல் தோல்வி, நட்பு, அம்மா, அப்பா, உறவுகள், மழை, வெயில் என நாமு தொடாத புள்ளியே இல்லை. தன் வார்த்தைகள் வழியே, காதலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கவும் செய்வார், காதல் தோல்வியால் துவண்ட மனதுக்கு ஆறுதல் கூறவும் செய்வார். நீங்கள் எந்த மனநிலையில் தேடினாலும் உங்களுக்கான வார்த்தைகளை பாடல்களாக வைத்திருப்பவர் நாமு. தமிழ்ச் சினிமாத்துறையில் புயலென புகுந்து வீசி இன்று அமைதியாய் கடந்து சென்ற நாமுவின் பிறந்ததினம் இன்று. உடலால் மறைந்தாலும் எங்கோ ஒரு மூலையில், ஒரு தூர ஒலியாக நாமுவின் வரி பாடலாக கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இசை இருக்கும் வரை, மொழி இருக்கும் வரை நாமுவுக்கு இறப்பில்லை.
நாமுவுக்கு என்றுமே அவர் வார்த்தைகள் சரியாய் பொருந்தும். அது,
'சாம்பல் கரையும்.. வார்த்தை கரையுமா?'