விஜயின் படத்தில் வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
பிரபல நடிகரான அர்ஜூனிடம் உதவியாளராக பணியாற்றிய விஷால் காந்தி கிருஷ்ணா இயக்கிய ‘செல்லமே’ படத்தில் நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். பாலா இயக்கத்தில் உருவான அவன் -இவன் படத்தில் விஷால் மாற்றுத்திறனாளியாக நடித்தார். அந்தப்படத்தில் இவரது நடிப்பு பெருமளவு பாராட்டை பெற்றது.
இதனைத்தொடர்ந்து பூஜை, ஆம்பள, கத்தி சண்டை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்த விஷாலுக்கு இறுதியாக ஆக்ஷன் படம் வந்தது. இதனிடையே துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க கமிட் ஆன விஷால், அந்த படத்தின் தயாரிப்பாளராவும் மாறினார். ஆனால் படத்தின் இயக்குநர் மிஷ்கினுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்தப்படம் கைவிடப்பட்டது. அந்த சமயத்தில் மேடையில் விஷாலை கடுமையாக தாக்கி மிஷ்கின் பேசிய நிலையில், அண்மையில் கொடுத்த நேர்காணல்களில் அவன் இப்போதும் என் தம்பிதான் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் இந்த மோதல் போக்கு பற்றியும், உறவு முறிந்தது பற்றியும் நடிகர் விஷால் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் துப்பறிவாளன் 2 படத்தை தயாரித்திருந்தால் விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி ( விஷாலின் தயாரிப்பு நிறுவனம்) கடலில் மூழ்கி இருக்கும். அந்தப்படத்தை தயாரிக்க வேண்டாம் என்ற முடிவை நான் தெரிந்தே எடுத்தேன். நான் ஒரு நடிகனாக மட்டும் அந்தப்படத்தில் நடித்திருந்தால் நான் எதுவும் பேசாமல் சென்றிருப்பேன்.
ஆனால் அந்தப்படத்தின் தயாரிப்பாளராக என்னால் அந்த வேதனையை தாங்கவே முடிய இல்லை. லண்டனில் நானும், பிரசன்னாவும் சென்றுகொண்டிருந்த போது, மிஷ்கினிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த தெருவில் நான் அப்படியே உட்கார்ந்து விட்டேன். உடனே பிரசன்னா என்னாச்சு என்றான். அவனிடம் அந்த மெசேஜ்ஜே நான் காண்பித்தேன். அதைப்பார்த்த அவனும் அப்படியே உட்கார்ந்தான். பிரேசிலில் ஷூட்டிங் இருந்ததால் , அங்கு ஷூட்டிங்கை முடித்து விட்டு அங்கே சென்றிருந்தோம். பின்னர் மீண்டும் அங்கே சென்ற நாங்கள், படத்தை கைவிடுவதாக முடிவெடுத்தோம்.
மிஷ்கின் நிச்சயம் ஒரு நல்ல ஃபிலிம் மேக்கர்தான். ஆனால் துப்பறிவாளன் 2 வை பொருத்தவரை, அவர் செய்த துரோகத்தை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அந்தப்படத்தில் அவரிடம் ஒரு ப்ளானிங்கே இல்லை. அவரை நான் லண்டனுக்கு அழைத்து சென்றிருக்கவே கூடாது. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.” என்று பேசினார்.