சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஒப்பந்தப்புள்ளி:
இந்த அறிக்கையில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது, விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையும் தயாரிக்கும் பணி பற்றியும் விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனையும் இடம் பெற்றுள்ளது. 2069- 70 ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும். பசுமை விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் எதிரொலியாக, காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னை இரண்டாவது விமான நிலையம் அமையுள்ள பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது காரணமாக ஏரிகள் நிரம்பி, கால்வாய்கள் வழியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இப்பகுதியில் இருந்து செல்லும் கால்வாய்கள் மூலமாக , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. விமான நிலையம் அமையுள்ள பகுதியில், அதிக அளவு விவசாய நிலமும், நீர் பிடிப்பு பகுதியில் இருக்கிறது, எனவே இந்த பகுதியில் விமான நிலையம் கூடவே கூடாது என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர்
இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களில் மாண்டஸ் புயல் எதிரொலியாக, மழை பெய்து வருகிறது. பெருமழையால் பரந்தூர் ஏரி மற்றும் மற்ற ஏரிகளிலிருந்து வெளியேறும் அதிகப்படியான நீர் பெருகால் வெள்ளப்பெருக்கு, ஏற்பட்டு ஏகனாபுரம் கிராமத்தில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே பாய்ந்து ஓடும் ஓடையில் அதிகமான நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ள பகுதியில் தான் வர இருக்கின்றன என பரந்தூர் பசுமை விமான நிலையத்தின், ஓடுபாதை அமைகிறது. இந்த பகுதியில் விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டு, சுற்று சுவர் அமைக்கப்பட்டால், வெள்ளத்தினால் சுற்றி இருக்கக்கூடிய பல கிராமங்கள் அழியும் , சூழல் உருவாகும் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், இந்தப் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இந்த இடத்திலா விமான நிலையம் அமைக்க போகிறீர்கள் " என கேள்வியும் எழுப்புகிறார் அவர்.