பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம்(My Dear Bootham) திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் மற்றும் ரமேஷ் பிள்ளை ஆகியோர் தயாரித்துள்ளனர். மை டியர் பூதம் திரைப்படம் மை டியர் குட்டிச்சாத்தான் மற்றும் ராஜா சின்ன ரோஜா படங்களின் வரிசையில் குழந்தைகளுக்கான ஃபேண்டஸி படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் ராகவன் தனது முந்தைய உரையாடலில் கூறியிருந்தார். அவரது முந்தைய படங்களான கடம்பன் மற்றும் மஞ்சப்பை ஆகிய படங்களில் இருப்பது போல இந்தப் படத்திலும் ஒரு அடிப்படை செய்தி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மை டியர் பூதம் படத்தில் அஷ்வந்த், ஆலியா மற்றும் பரம் குகனேஷ் போன்ற சிறார் நடிகர்கள் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர பிக் பாஸ் புகழ் சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். யுகபாரதி படத்துக்கான பாடல்களை எழுதியுள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார். யுகே செந்தில் குமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் குறிப்பிட்ட ஒரு காட்சியை எடுக்க மட்டும் 7 மாதங்கள் ஆனதாக படத்தில் நடித்துள்ள மாஸ்டர் பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘படத்தில் கிராபிக்ஸுக்காக குதிரையை நிக்க வைத்து ஒரு காட்சி படமாக்க வேண்டியிருந்தது. குதிரை அவ்வாறு நிற்க எவ்வளவு நாட்கள் ஆகும் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் முதலில் 15 முதல் 20 நாட்கள் என்றார்கள். நான் 25 நாட்கள் கூட எடுத்துக்கொள்ளச் சொன்னேன். கிராபிக்ஸ் குழுவினருக்கு ஒரு மாதம் கழித்து அழைத்தேன் பதிலில்லை. 45 நாட்கள் கழித்து அழைத்தேன் அப்போதும் பாதிதான் வேலை முடிந்திருந்தது. இந்த ஒரு காட்சி அதாவது சுமார் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே வரும் இந்தக் காட்சிக்கு மட்டும் 7 மாதங்கள் கிராபிக்ஸ் உருவாக்கப்பட்டது. படத்தில் அத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது என்பதைச் சொல்லவே இதைக் குறிப்பிட்டேன்’ என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்